fbpx

இயற்கை சூழ.. அழகால் வியக்க வைக்கும் பண்பொழி திருமலை கோயில்..!! தென்காசியில் இப்படி ஒரு இடமா..?

தென்காசி என்றால் குற்றாலம் மட்டுமல்ல பல அருவிகள், அணைகள், கோயில்கள் என இயற்கை சூழ்ந்த பல இடங்களின் தொகுப்பு தான் தென்காசி. அவைகளில் முக்கியமானதாகவும், இயற்கை அழகு கொஞ்சும் மனசுக்கு நிம்மதியளிக்கும் தலமாகவும், வரம் தரும் முருகப் பெருமானின் திவ்வியத் தலமாகவும் திகழ்வது திருமலைக் கோயில் என்னும் திருத்தலம். இக்கோயிலின் வரலாறு பற்றியும், எப்படி செல்ல வேண்டும், எப்போது செல்ல வேண்டும் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

கோயில் அமைப்பு : செங்கோட்டையில் இருந்து வடக்கே 5 கி.மீ. தொலைவில் பண்பொழியில் என்ற இயற்கை எழில் சூழ்ந்து, பசுமை படர்ந்துள்ள இடத்தில் சிறிய மலைமீது அமைந்திருக்கிறது அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோவில். இந்த மலைமீது ஏறிச் செல்ல சுமார் 544 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மலையை நெருங்க நெருங்க குற்றால சாரலின் குளிர்ச்சி அதிகரிக்க தொடங்கும். . திருமலை கோவிலுக்கு படி ஏறி செல்லலாம். படி ஏற முடியாதவர்கள் கோவிலுக்குனு உண்டான வேன் மூலம் பத்து ரூபாய் கட்டணம் செலுத்தி மலைக்கு மேல போய்க்கலாம். அல்லது நீங்க பைக் கார்ல வந்திருந்தீங்கன்னா கூட வாகனங்களுக்கு ஏத்த மாதிரி கட்டணம் செலுத்தி அதிலேயே மலைக்கு மேலயும் போகலாம் .இருசக்கர வாகனத்திற்கு இருபது ரூபாய், காருக்கு 50 ரூபாய், பேனுக்கு அறுபது ரூபாய்க்கு வசூல் செய்யப்படுகிறது. வாகனங்களை மலை மேல ஏறும்போது ஒருபுறம் ஓங்கி உயர்ந்த மலையும் இன்னொரு புறம் பச்சை பசேல் என்று இருக்கும். குறிப்பா மாலை நேரங்களில் சென்றால் ஒரு மினி ஊட்டி மாதிரியே இருக்கும். 

மலை மீது அமையப் பெற்றுள்ள இந்த கோவிலின் முகப்பில் 16 படிகள் ஏறிச் சென்று வணங்கும் சன்னதியில் உச்சி பிள்ளையார் அருள்புரிகிறார். இந்த பதினாறு படிகளை ஏறிச் சென்று உச்சி பிள்ளையாரை வழிபட்டால் பதினாறு பேறுகளும் கிட்டும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

கோவில் உருவான வரலாறு : முற்காலத்தில் இந்த திருமலைக் கோவிலில் ஒரு வேல் மட்டுமே இருந்தது. அதற்கு பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து வந்தார். ஒரு நாள் பூஜையை முடித்துவிட்டு அவர் அங்குள்ள புளியமரத்தின் அடியில் ஓய்வுக்காக படுத்திருந்தார். அப்போது அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், “பட்டரே இந்த மலை எனக்கு சொந்தமானது. இங்கிருந்து சற்று தொலைவில் அச்சன்கோவிலுக்கு போகிற வழியில் உள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில் நான் மணலில் சிலை வடிவில் புதைந்துஇருக்கிறேன். நீர் அங்கு சென்று, எறும்புகள் சாரை சாரையாக ஊர்ந்து செல்லும் ஒரு குழியை தோண்டிப்பார்த்தால் அங்கு எனது சிலை இருக்கும். அதை எடுத்து வந்து இந்த மலையில் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள்” என்று கூறினார்,

இதைத்தொடர்ந்து பூவன் பட்டரும், பந்தளமன்னரும் முருகப்பெருமான் கனவில் வந்து சொன்ன அந்த இடத்துக்கு சென்று புதைந்து கிடந்த சிலையை பயபக்தியுடன் எடுத்து திருமலைக்கு கொண்டு வந்து குவளை பொய்கையின் அருகேயுள்ள புளியமரத்தின் அடியில் வைத்து பூஜைகள் செய்தனர். பிற்காலத்தில் பந்தளத்தை ஆண்ட மன்னர்கள், பக்தர்கள் மலைக்கு சென்று முருகப்பெருமானை வழிபடுவதற்கு வசதியாக படிகள் அமைக்கவும், கோவிலை எழுப்பவும் ஏற்பாடு செய்தனர்.

சுற்றுலா தளம் : பசுமை நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி, தனியாக அமைந்திருக்கு சிறிய குன்றின் மீது அமைந்திருக்கிறது. இந்த கோவில், அந்த மலையின்மீதிருந்து பார்த்தால், சுற்றியுள்ள பகுதிகளில் தென்னை மரங்களும், இயற்கையின் அழகும், உடலை உரசிச் செல்லும் குளிர் காற்றும் உற்சாகத்தை கொடுக்கும். இது சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாகவும் திகழ்கிறது..

திருமலை முருகன் கோவில் சிறந்த ஆன்மிக தலமாகவும், சுற்றுலா தலமாகவும் இருந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் இங்கே வந்து செல்கின்றனர். அதுமட்டும் அல்லாமல், இந்த இடம் சினிமா சூட்டிங் ஸ்பாட்டாகவும் இருந்து வருகிறது.

Read more:ஃபெண்டானில் விவகாரத்தில் சீனா-அமெரிக்கா மோதல்.. பிரச்சனைக்கு காரணம் என்ன..?

English Summary

The Tirumala Temple, which brings fame to Tenkasi.. a beautiful place surrounded by natural beauty..!!

Next Post

நோட்...! நாளை காலை 10 மணி முதல் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்...!

Fri Mar 7 , 2025
Public Distribution Scheme Grievance Redressal Camp from 10 am tomorrow

You May Like