கோயம்புத்தூரில் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக சிக்கிய VAO பணத்துடன் குளத்தில் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், தொம்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக விண்ணப்பித்துள்ளார். இதற்காக அவர், மத்வராயபுரம் விஏஓ அலுவலத்திற்கு சென்றுள்ளார். அங்கு விஏஓ ஆக பணியாற்றிய வெற்றிவேல், கிருஷ்ணசாமியிடம் ரூ.3,500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வாரிசு சான்றிதழுக்கான அனைத்து ஆவணங்களும் சரியாக இணைக்கப்பட்டுள்ளது. பிறகு ஏன் ரூ.3,500 தர வேண்டு எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஏஓ சான்றிதழை வழங்காமல் காலம் கடத்தி வந்துள்ளார். இதனால் மன உலைச்சலுக்கு ஆளான கிருஷ்ணசாமி இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுக்களை கிருஷ்ணசாமியிடம் கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அதனை விஏஓ வெற்றிவேலிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி, கிருஷ்ணசாமி விஏஓவுக்கு போன் செய்து அவர் கேட்ட பணம் தயாராக இருப்பதாகவும் போரூர் அருகே வந்து வாங்கிக்கொள்ளும்படியும் கூறியுள்ளார். அதன்படி வெற்றிவேலும் அந்த பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு கிருஷ்ணசாமி பணம் கொடுக்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், வெற்றிவேலை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். இதனை கண்ட வெற்றிவேல் பைக்கில் தப்பில் செல்ல முயன்றுள்ளார். சிறிது தூரம் சென்றதும், வெற்றிவேல் பணத்துடன் குளத்தில் குதித்துள்ளார். அப்போது விடாமல் வெற்றிவேலை பிடித்த போலீசார், குளத்தில் விழுந்த பணத்தை தேடி வருகின்றனர்.
தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலை பேரூர் தாசில்தார் அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மேலும் குளத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்களை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.