தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திடீரென நேற்று (மார்ச் 25) டெல்லி விரைந்தார். டெல்லியில் புதிதாக திறக்கப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட்ட அவர், நேற்றிரவு 8.15 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அவருடன் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், எம்பி தம்பிதுரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதன் பின்னர், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார்.
2023 செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், முதல்முறையாக தற்போது அமித்ஷாவை சந்தித்திருக்கிறார். இந்நிலையில், வரும் தேர்தலில் அதிமுக 120 தொகுதிகளிலும் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் 114 தொகுதிகளில் போட்டியிட திட்டமிடப்படப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், 2026இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா கூறியிருக்கிறார்.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவைக்கு செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவரிடம் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித்ஷா சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், “எல்லாம் நன்மைக்கே” என பதிலளித்துவிட்டு சென்றார். முன்னதாக அதிமுகவில் அணிகள் இணைய வேண்டுமென ஓபிஎஸ் முக்கிய கோவில்களுக்கு சென்று நேற்று வழிபாடு செய்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.