உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண், பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்திருக்கிறார். அதே ஊரிலேயே கணவனுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். தனது கணவரை கடந்த சில தினங்களாக காணவில்லை என்பதால் தெதாகஞ்ச் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்திருக்கிறார். அந்த காவல் நிலையத்தின் அதிகாரி நீரஞ்குமார் இது குறித்து அந்த கிராமத் தலைவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவரும் காவல் நிலையத்திற்கு வந்து பெண்ணின் கணவரை கண்டுபிடிக்க உதவி செய்வதாக கூறியிருக்கிறார். அதுவரைக்கும் அந்த பெண்ணை காவல் நிலையத்தில் தங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் நீரஜ் குமார். காவல் நிலையத்தில் தங்கியிருந்து சின்ன சின்ன வேலைகளை செய்து வருமாறு கூறியிருக்கிறார்.
இப்படியே 8 நாட்கள் கடந்துள்ளன. அந்த பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து நீரஜ் குமார் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அந்த கிராமத் தலைவரும் பலாத்காரம் செய்திருக்கிறார். கடைசியில் தான் அந்த பெண்ணின் கணவரை கண்டுபிடித்து கொடுத்திருக்கிறார் நீரஜ் குமார். அவரிடம் இருந்து 2 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டுதான் அந்த பெண்ணை விடுவித்து இருக்கிறார். நடந்ததை எல்லாம் வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று விரட்டி அனுப்பி இருக்கிறார் நீரஜ் குமார். ஆனால், பாதிக்கப்பட்ட அந்த பெண் கணவனை அழைத்துக் கொண்டு மாவட்ட காவல்துறை உயர் அதிகாரியிடம் புகார் அளித்திருக்கிறார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் இது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையில், 8 நாட்கள் காவல் நிலையத்தில் பெண்ணை சிறை வைத்தது உறுதியாகியிருக்கிறது. இதனால் தங்கள் மீது கடுமையான வழக்கு பாயும் என்பதால் நீரஜ்குமார் தலைமறைவாகி இருக்கிறார். அந்த ஊர் தலைவரும் தலைமறைவாகி இருக்கிறார். இருவரையும் பிடிக்கவும் இவர்கள் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.