அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆட்சியில், உலகம் அணுசக்தி 3-ம் உலகப் போரை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது, என்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்..
2017- 2021 வரை அமெரிக்க அதிபராக இருந்தவர் டொனால்ட் ட்ரம்ப்.. தனது பேச்சுக்கள் மற்றும் செயல்பாடுகளால் பரபரப்பை ஏற்படுத்தி வந்த ட்ரம்ப், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளானார். இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்ரம்ப் மற்றொரு சர்ச்சையில் சிக்கினார்.. ஆம்.. அமெரிக்காவின் பிரபல ஆபாச நடிகை ஸ்ட்ராமி டேனியல்ஸ், 2016 தேர்தலுக்கு முன்பு ட்ரம்ப் தன்னுடன் ரகசிய உறவில் இருந்ததாக குற்றம்சாட்டினார். அந்த தொடர்பை மறைக்க ட்ரம்ப் தனக்கு 1,30,000 டாலர் வழங்கியதாக ஸ்ட்ராமி டேனியல்ஸ் கூறியிருந்தார்..
ஆனால் இந்த தொகை ட்ரம்பின் தேர்தல் வரவு செலவு கணக்கில் சட்டரீதியான செலவு என்று பதிவு செய்யப்பட்டது.. இதுதொடர்பான வழக்கு மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த நிலையில் தற்போது ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.. இந்த வழக்கில் ஆஜராக வந்த ட்ரம்ப் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்..
ஜாமீனுக்கு பின்னர் உரையாற்றிய ட்ரம்ப் தற்போதைய அமெரிக்க அரசாங்கம் நாட்டை அழித்து வருவதாக குற்றம் சாட்டினார். அணுவாயுதங்களைப் பயன்படுத்துவதாக பல்வேறு நாடுகளால் பகிரங்கமான அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும், தமது ஆட்சிக்காலத்தில் இந்த அச்சுறுத்தல் இல்லை என்றும் தெரிவித்தார்.. மேலும் பேசிய ட்ரம்ப் “ பிடன் நிர்வாகத்தின் தலைமையின் கீழ் ஒரு முழுமையான அணுஆயுத 3-ம் உலகப் போருக்கு வழிவகுக்கும். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை,
ஜோ பிடனின் ஆட்சியின் கீழ் அமெரிக்கா இப்போது குழப்பத்தில் உள்ளது. நமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. பணவீக்கம் கட்டுக்குள் இல்லை. சீனாவுடன் ரஷ்யா இணைந்துள்ளது. சவுதி அரேபியா ஈரானுடன் இணைந்துள்ளது.. சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் இணைந்து அச்சுறுத்தும் மற்றும் அழிவுகரமான கூட்டணியாக உருவாகிவிட்டது.. நான் உங்கள் அதிபராக இருந்திருந்தால் இது ஒருபோதும் நடந்திருக்காது. ரஷ்யாவும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி இருக்காது. அந்த உயிர்கள் அனைத்தும் காப்பாற்றப்படும்.
நமது நாணயம் வீழ்ச்சியடைந்து வருகிறது, விரைவில் இது உலகத் தரமாக இருக்காது, இது 200 ஆண்டுகளில் நமது மிகப்பெரிய தோல்வியாக இருக்கும். அது போன்ற எந்த தோல்வியும் நம்மை ஒரு பெரிய சக்தியாக இருந்து எடுத்துச் செல்லாது.. அமெரிக்காவின் வரலாற்றில் மிக மோசமான 5 அதிபர்களை எடுத்துக்கொண்டால், ஜோ பிடன் மற்றும் அவரின் நிர்வாகம் செய்தது போல் அவர்கள் நம் நாட்டிற்கு அழிவை ஏற்படுத்தியிருக்க மாட்டார்கள்” என்று தெரிவித்தார்..