திருப்பதியில் இருந்து காளஹஸ்தி கோயிலுக்கு பேருந்தில் சென்ற பக்தரிடம் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகளை ஆட்டையை போட்ட இளம்பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலக முழுவதில் உள்ள பக்தர்கள் வருகின்றனர். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். பின்னர், அங்கிருந்து பேருந்தில் ஸ்ரீகாளஹஸ்தி கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது பேருந்தில் அவருக்கு அருகில் இளம்பெண் ஒருவர் அமர்ந்துள்ளார். கொஞ்ச நேரத்தில் அந்த இளம்பெண் பக்தரிடம் நைசாக பேச்சு கொடுக்க ஆரம்பித்து பேசிவந்துள்ளார்.

நீண்ட நேரமாக இருவரும் தங்களது குடும்ப விஷயங்கள் உள்ளிட்ட பல தகவல்களை பகிர்ந்துள்ளனர். காளஹஸ்தி பேருந்து நிலையத்தை சென்றடைந்ததும் சிறிது நேரம் லாட்ஜில் ஓய்வெடுத்துவிட்டு கோயிலுக்கு செல்லலாம் என கூறியுள்ளார். இளம்பெண் ஆசையாக அழைத்ததால் பக்தரும் சம்மதித்துள்ளார். இதையடுத்து, இருவரும் அருகில் இருந்த லாட்ஜ் ஒன்றுக்கு சென்று ரூம் எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, பிரசாதம் எனக்கூறி பக்தருக்கு மயக்க மருந்து கலந்த லட்டுவை கொடுத்துள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அந்த பக்தர் மயக்கமடைந்தார். பின்னர், கண்விழித்து பார்க்கும் போது 6 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை அந்த இளம்பெண் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்தத பக்தர் காளஹஸ்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாட்ஜில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த இளம்பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.