ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மணியம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இவரது சகோதரருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. எனவே அருகே இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆதலால் இந்த சிறுமியும், தனது சகோதரனுக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
அதே மருத்துவமனையில் பாலகொண்டா என்ற பகுதியைச் சேர்ந்த ஒருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை கவனித்து கொள்ள 23 வயது இளைஞர் வினோத் என்பவர் இருந்துள்ளார். அப்போது, சிறுமியிடம் வினோத் பேச்சு கொடுத்துள்ளார். சிறுமியும் அவருடன் பேசி நட்பாக பழகியுள்ளார். அப்போது சிறுமி தனது குடும்பம் வறுமையில் இருப்பதாக கூறவே, வினோத்தும் ஆறுதலாக பேசி வந்துள்ளார்.
இருவரும் போன் நம்பர் பெற்றுக்கொண்டு தொலைபேசியிலும் இவர்களது நட்பை வளர்த்துள்ளனர். மேலும், தனக்கு என்ன வேண்டுமானாலும் செய்வதாக சிறுமிக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறவே, சிறுமியும் வினோத்தை முழுமையாக நம்பியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சிறுமி இரவு நேரத்தில் கழிவறை சென்றுள்ளார். இதனைக் கண்ட வினோத்தும், அவரது பின்னே சென்றுள்ளார். வினோத்தை கண்ட சிறுமி உடனே அங்கிருந்து போகுமாறு கத்தி கூறியுள்ளார். ஆனால் வினோத் அங்கிருந்து செல்லாமல், சிறுமியின் வாயில் துணியை வைத்து அடைத்து, கழிவறையிலேயே கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதில் வலி தாங்காமல் சிறுமி கத்திடவே, அங்கிருந்தவர்கள் என்ன என்று பார்க்க வந்துள்ளனர். யாரோ வருவதை அறிந்த வினோத் அங்கிருந்து உடனே தப்பியோடியுள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் உள்ளே வந்து பார்த்த போது சிறுமி இரத்தப்போக்குடன் வலியில் கடத்திக்கொண்டிருந்தார். இதைத்தொடர்ந்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்தனர். தொடர்ந்து காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளி வினோத்தை தேடி வருகின்றனர். இந்த நிகழ்வு குறித்து சிறுமியின் குடும்பத்தினரும் புகார் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.