விழுப்புரம் மாவட்டத்தில் தேநீர் அருந்துவதை போல நடித்து மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற நபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே மொளச்சூர் பகுதியில் ராணி என்ற 60 வயது மூதாட்டி தேநீர் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். நேற்று, இரவு வழக்கம் போல இரு நபர்கள் டீ குடிக்க வந்துள்ளனர்.
அங்கே டீ வாங்குவதுபோல நடித்து யாரும் இல்லாத நேரம் பார்த்து மூதாட்டியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடி இருக்கின்றனர். மூதாட்டி கத்தி கூச்சலிட அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் திருடர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு சென்று மூதாட்டி அந்த மர்ம நபர்கள் குறித்து புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை கொண்டு திருடர்களை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.