ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் என்ற இடத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 28பேர் உயிரிழந்தது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது போல ஒரு சம்பவம், 2019-ம் ஆண்டு நடந்தது. புல்வாமாவில் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனத்தை வெடிகுண்டு வைத்து தாக்கினார்கள். இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுக்க அதிர்ச்சியில் மூழ்கியது.
இந்த முறை, பாதுகாப்புப் படையினர் அல்ல. சுற்றுலா பயணிகள் குறிவைக்கப்பட்டனர். அவர்கள் மத அடையாளத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு தாக்கப்பட்டனர். இது மிகவும் மோசமான ஒன்று. எவரும் பாதுகாப்பாக இல்லை என்ற உணர்வை உருவாக்கும் ஒரு சூழல்.
என்ன நடந்தது? 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி காலை ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 78 பேருந்துகள் கொண்ட சிஆர்பிஎஃப் கான்வாயில், 2500க்கும் மேற்பட்ட வீரர்களுடன் கிளம்பியது. இந்த தாக்குதலுக்கான சதித்திட்டம் மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு, 3 மணியளவில் புல்வாமா வழியாக கான்வாய் சென்றபோது, பயங்கரவாதி அடில் அகமது தார் ஒரு காருடன் கான்வாயில் வேகமாக மோதியது.
இந்த காரில் 100 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வெடிப்பொருட்களில் வீரியத்தால் கான்வாயின் பெரும்பாலான பேருந்துகளின் கண்ணாடிகள் விரிசல் ஏற்பட்டு, பல வீரர்கள் காயமடைந்தனர். இதில், சிஆர்பிஎஃப் 76 பட்டாலியனின் பேருந்து கான்வாயில் இருந்த 40 வீரர்கள் சம்பவ இடத்திலேயே வீர மரணம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரித்தலில் மசூத் அசார் மற்றும் அவரது சகோதரர்கள் அப்துல் ரவூப் அஸ்கர் மற்றும் மௌலானா அம்மார் அல்வி ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்டனர். இது தவிர, முகமது இஸ்மாயில், முகமது அப்பாஸ், பிலால் அகமது, ஷாகீர் பஷீர் ஆகியோரின் பெயர்களும் வெளியிடப்பட்டது.
புல்வாமாவிலும், பஹல்காமிலும் ஒரே நோக்கம்.. இந்திய மக்களிடையே பயமும் பிளவுமூட்டும் முயற்சி. இதை பயங்கரவாதிகள் தொடர்ந்து செய்கிறார்கள். ஆனால் இந்தியா ஒரு உறுதியான நாடு. இத்தகைய சம்பவங்கள் எங்களின் ஒற்றுமையைக் குறைக்காது.
இந்தியாவில் மக்கள் மதம், மொழி, மாநிலம் எனப் பிரிந்து வாழ்ந்தாலும், இரத்தம் மட்டும் ஒரே நிறமே. அந்த உண்மையை மறந்து, மனிதர்களை அடையாளத்தினால் பிரித்து கொல்வதை நாம் மன்னிக்க முடியாது. பஹல்காமில் சாய்ந்த உயிர்கள் வெறுப்பின் விலையாகி விட்டன. இனிமேல் ஒரே உயிரும் இழக்கக் கூடாது என்ற உறுதிப்போடு, இது போன்ற தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.