தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் பகுதியில் உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சத்தியபாமா. சத்தியபாமா சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் ஏரலை பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்ற வாலிபர் குறி சொல்வதாக கூறி அந்தப் பகுதிக்கு வந்துள்ளார்.
அதனை தொடர்ந்து சத்தியபாமா அவரிடம் குறி கேட்டுள்ளார். அந்த வாலிபர் உன் கணவர் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் , அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் கூறி ரூ.2870 மற்றும் ஒரு ஜோடி கொலுசையும் வாங்கிக் கொண்டுள்ளார்.
மேலும் அந்த வாலிபர் வைத்திருந்த செம்பில் இருந்து ஏதோ ஒரு தகடினை எடுத்து கொடுத்து விட்டு இத்துடன் உன் பிரச்சினை எல்லாம் முடிந்து விட்டதாக கூறி விட்டு, மாலை 6 மணிக்கு தனக்கு போன் செய்தால் மேலும் சில விவரங்களை சொல்கிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
மாலை 6 மணி அளவில் சத்தியபாமா அவருக்கு போன் செய்த நிலையில் பாலமுருகன் போன் எடுக்கவில்லை. சத்தியபாமா இது குறித்து தனது தோழி பேபியிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர்கள் அவரை பிடிக்க வேண்டும் என பிளான் செய்து உறவினர் ஒருவர் மூலம் அந்த வாலிபரை தொடர்பு கொண்டு பரிகாரம் செய்ய வேண்டுமென அழைத்துள்ளனர்.
இதை நம்பிய அந்த வாலிபர் சங்கரன்கோவில் அருகே வந்தபோது அந்த பெண்கள் இருவரும் அவரை மடக்கி பிடித்து சங்கரன்கோவில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.