பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் 9.79 லட்சத்திற்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளதாகவும் குறிப்பாக, இந்திய ரயில்வேயில் அதிகபட்சமாக 2.93 லட்ச காலியிடங்கள் உள்ளன என்று அரசு பணியாளர்களுக்கான மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளது.. இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவது என்பது மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அமைப்புகளின் தேவைகளால் நிர்வகிக்கப்படும் ஒரு தொடர்ச்சியான செயல்முறை என்று மத்திய அமைச்சர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் “ காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்புமாறு அனைத்து அமைச்சகங்கள் / துறைகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. இந்திய அரசாங்கத்தின் ரோஸ்கர் மேளாக்கள் மேலும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஒரு ஊக்கியாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே மத்திய செலவினத் துறையின் ஆண்டறிக்கையின்படி, பாதுகாப்புத் துறையில் (சிவில்) 2.64 லட்சம், உள்துறைத் துறையில் 1.43 லட்சம், இந்தியப் பதவிகளில் 90,050, வருவாய் துறையில் 80,243, இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையில் 25,934, அணுவியல் துறையில் 9,460 காலியிடங்கள் உள்ளன.
சமீப காலமாக இந்தியாவில் தனியார் வேலைத் துறை பெருகிவிட்டாலும், நாட்டில் அரசு வேலைகளுக்கான தேவை இன்னும் அதிகரித்து வருகிறது. நியாயமான ஊதியத்தைத் தவிர, அரசாங்க வேலையில் சமூக நிலை, வேலைப் பாதுகாப்பு, உடல்நலக் காப்பீடு, வீட்டுவசதி மற்றும் பிற சலுகைகள் ஆகியவை அடங்கும். இது தவிர, தனியார் நிறுவனங்களின் தொடர்ச்சியான பணிநீக்கங்கள் அரசாங்க வேலைகளுக்கான தேவையை அதிகரித்துள்ளன.
குறிப்பாக இந்திய ரயில்வேயில் கடந்த 8 ஆண்டுகளில் அரசு வேலைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இருப்பினும், 2014-15 முதல் 2021-22 வரை பெறப்பட்ட 22.05 கோடி விண்ணப்பங்களில் 7.22 லட்சம் அல்லது 0.33 சதவீதம் மட்டுமே மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டதாக, கடந்த ஆண்டு மக்களவையில் மழைக்கால கூட்டத்தொடரில் அரசு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.