தமிழ்நாட்டில் வரும் 15ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று வலுவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் வரும் 15ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (டிசம்பர் 10) கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாளைய தினம் (டிசம்பர் 11) கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.