மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் தலாசாரியை சேர்ந்தவர் 35 வயது பெண். இவர், தன்னுடைய வீட்டில் வாஸ்து குறைபாடுகள் மற்றும் தீய சக்திகள் இருப்பதாக நம்பியிருக்கிறார். இதனை போக்கிவிட்டால் தன்னுடைய வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் போய்விடும் என சிலர் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக, அந்த பெண்ணின் கணவர் மீதே தீய சக்தி இருப்பதாக பயமுறுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக அவர் கணவரின் நண்பர்கள் உதவியை நாடியுள்ளார். அதில் ஒருவர் மாந்திரீகம் போன்றவற்றை செய்பவர் என்று கூறப்படுகிறது. அப்போது, அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். தீய சக்தி, வாஸ்து பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்க அனுகியபோது தன்னை பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், நகை பணத்தை பறித்துக்கொண்டதாகவும் 5 பேர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 5 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் பாதிக்கப்பட்ட பெண்ணுடைய கணவரின் நண்பர்கள். அவரது கணவர் மீது சில தீய சக்திகள் செலுத்தப்பட்டு உள்ளதாகவும், அமைதியை மீண்டும் பெற சில சடங்குகளில் பங்கேற்க வேண்டும் என்று பெண்ணிடம் கூறி தவறாக நடந்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளிகள் கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு அடிக்கடி செல்லத் தொடங்கி உள்ளனர். பாதிக்கப்பட்டவர் தனியாக இருக்கும்போது சடங்குகளை நடத்தும் அவர்கள், அவருக்கு ‘பஞ்சமித்’ என்று சொல்லப்பட்ட பானத்தை கொடுத்து மயக்கமடைய செய்து பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.