இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, பாகுபலி திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத், சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெக்டே ஆகியோர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.. கல்வி, விளையாட்டு, எழுத்து என அந்தந்த துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு புத்தக வெளியீட்டு விழாவில், இளையராஜா பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியது.. தமிழகத்தில் விவாதப் பொருளானது.. எதிர்க்கட்சிகள் இளையராஜாவை விமர்சித்து வந்த நிலையில், பாஜக இளையராஜாவுக்கு ஆதராக கருத்து தெரிவித்து வந்தது..
மேலும் பிரதமரை பாராட்டி பேசியதால் இளையராஜாவுக்கு ஏதேனும் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது.. இந்த சூழலில் நேற்று நியமன உறுப்பினர் குறித்த அறிவிப்பு வெளியானது.. இதனிடையே நியமன உறுப்பினர்கள் விவகாரத்தில் பாஜக அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளனர்..
சென்னையில் இரட்டை மலை சீனிவாசன் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்திய பின்னர் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர், “ இளையராஜா எம்.பியாக நியமிக்கப்பட்டதில் அரசியல் இல்லை.. பிரதமர் மோடியை மட்டுமின்றி, முதலமைச்சர் ஸ்டாலினையும் பாராட்டி இளையராஜா பேசியுள்ளார்.. இளையராஜாவின் கருத்தை தனிப்பட்ட கருத்தாகவே பார்க்க வேண்டும்.. இதில் அரசியலை கலக்க வேண்டிய அவசியமில்லை.. இளையராஜாவின் தனித்திறமையால் கிடைத்த அங்கீகாரத்தை கூட, எதிர்க்கட்சி தலைவர்கள் கொச்சைப்படுத்த முயற்சிக்கின்றனர்.. ஜாதி, மதத்திற்குள் அடைக்க முடியாத ஒரு மாமனிதர் இளையராஜா.. எனவே வேண்டாத விமர்சனங்களை விட்டுவிட்டு இளையராஜாவை வாழ்த்த வேண்டும் என்பதே எனது கருத்து..” என்று தெரிவித்தார்..