ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நாளை முதல் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்திருந்தன. இதற்கிடையே, இன்று போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனால், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்த அதிருப்தியில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் இன்றே வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
சென்னை திருவான்மியூர் பணிமனையில் பேருந்துகளை இயக்காமல் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் பேருந்துகளை இயக்காமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பயணிகள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையும் நெருங்கி வருவதால், லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இந்த வேலைநிறுத்தம் தொடர்ந்தால், அவர்கள் ஊர்களுக்கு செல்வதில் கடும் சிரமம் ஏற்படும். எனவே, தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.