பிக் பாக்கெட் அடிப்பது போன்று பொதுச்செயலாளர் பதவியை பெற நினைக்கிறார்கள் என்று ஓபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார்..
மார்ச் 26-ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறுகிறது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக தேர்தல் ஆணையர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முறைப்படி நடக்கவில்லை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.. சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் “ பிக் பாக்கெட் அடிப்பது போன்று பொதுச்செயலாளர் பதவியை பெற நினைக்கிறார்கள்.. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எதுவு முறைப்படி நடக்கவில்லை.. இபிஎஸ்-க்கு ஆதரவாக விதிகளை மாற்றியமைத்து தேர்தலை அறிவித்துள்ளனர்.. எடப்பாடி பழனிசாமி ஒரு சர்வாதிகாரி போல செயல்படுகிறார்.. சாதாரண தொண்டன் கூட போட்டியிட முடியாது என்ற சூழலை இபிஎஸ் தரப்பு மாற்றிவிட்டது..
உள்ளாட்சி தேர்தல், மக்களவை தேர்தல், சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோற்றதற்கு எடப்பாடி தான் காரணம்.. அதிமுக தொண்டர்கள் யாரும் பயப்பட வேண்டாம்.. கட்சியை நாங்கள் மீட்டெடுப்போம்..” என்று தெரிவித்தார்..