சென்னை தி.நகர், பாண்டிபஜாரில் தரைதளம் மற்றும் 3 தளங்களுடன் வணிக கட்டடத்துக்கு அனுமதி பெற்றுவிட்டு, 10 தளங்கள் வரை கட்டிய தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று, அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்தை வரன்முறை செய்யக் கோரி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் விண்ணப்பித்திருந்தது. ஆனால், இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனால், அரசிடம் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அந்த கட்டடத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சீல் வைத்து, கட்டடத்தை இடிப்பது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து கட்டுமான நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், அனுமதியின்றி கட்டப்பட்ட தளங்களை 8 வாரங்களுக்குள் இடிக்க நடவடிக்கை எடுக்குமாறு பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்டது.
அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானங்களை வரன்முறை செய்ய வேண்டும் என உரிமையாக கோர முடியாது என்றும் வரன்முறை சலுகையை வழக்கமான நடைமுறையாக அரசு மேற்கொள்ளக் கூடாது என்றும் ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. வரன்முறை செய்யக் கோரும் விண்ணப்பங்களை ஏற்பதன் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகளை சட்டபூர்வமாக்குவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அனுமதியின்றி கட்டுமானங்கள் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் விதிமீறல் கட்டுமானங்கள் குறித்து புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். பெரியத் தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற காரணத்துக்காக விதிகளை மீறியவர்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளார்.