தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்து திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், ”ஒரு கட்சி அரசியல் மாநாடு நடத்தினால் அதற்கு சில முறைகள் இருக்கின்றன. முன்னதாக கட்சித் தலைவர்கள் பேசுவார்கள். தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அதை கட்சி தொண்டர்களின், நிர்வாகிகளின் ஒப்புதலோடு நிறைவேற்றுவார்கள். இறுதியாக தலைவர் பேசுவார். ஆனால், விஜய் மாநாட்டில் அவர் மட்டுமே பேசினார். தீர்மானமே இல்லை. முதல் அரசியல் மாநாட்டில் போடும் தீர்மானம் தான் பொன் ஏட்டில் பொறிக்கப்படும்.
காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டுப் பாதுகாப்பு வழங்கியதற்கும், தொண்டர்களுக்கும் இறுதியாக நன்றியுரை சொல்ல வேண்டும். அதைக்கூட விஜய் சொல்லவில்லை. அந்த மாநாட்டை பார்த்தால், ஆடியோ லாஞ்ச் போல இருந்தது. சர்கார் பட கிளைமாஸ் போல விஜய் பேசினார். உடன் நிர்வாகிகளே இல்லை. ஜெயலலிதா எப்படி தன் பக்கத்தில் யாரையும் உட்கார வைக்கமாட்டாரோ அதேபோல விஜய்யும் செய்திருக்கிறார். அது ஒரு குறையாக தெரிந்தது.
அரசியல் என்றால் நேரடியாக விமர்சிக்க வேண்டும். அதிமுக, பாஜகவை விட்டுவிட்டு திமுகவை மட்டும் விமர்சித்தால் மக்கள் சந்தேகப்படுவார்கள். வாரிசு அரசியல் செய்து லஞ்சம் வாங்குகிறார்கள் என்கிறார். வாரிசு அரசியல் என்றால் கோபாலபுரத்தில் உள்ள மக்கள் மட்டுமா ஓட்டுப் போட்டார்கள்? உதயநிதி தனக்குப் போட்டியாக இருக்கிறார் என்பதற்காக தாக்கி பேசுகிறார். அது எப்படிச் சரியாகும்? 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்கிறார். கூட்டணிக்கு யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வேன் என்கிறார். முதலில் இவர் கொள்கையை மக்கள் ஏற்றுக் கொண்டு ஓட்டுப்போடவேண்டும்.
பிறகுதான் மந்திரி சபை அமைப்பது, ஆட்சியில் பங்கு கொடுப்பது பற்றிப் பேச வேண்டும். இவர் கொள்கையில் ஒன்று கூட புதிய விஷயம் இல்லை. திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், விசிக சொன்னதைத்தான் இவர் சொல்லி இருக்கிறார். பகவத்கீதையைக் கொடுத்தால் கையில் வாங்கிக் கொள்வார். பெரியாரை ஏற்பேன் என்பார். மாநாட்டுக்குப் பூமி பூஜை போடுவார். பல கொள்கை கோளாறுகள் உள்ளன. சீமான் அதனால்தான் முதலில் விஜய்யை வரவேற்றார். இப்போது ஒத்துப் போகாது என்கிறார்.
சீமான் தனியாக நின்று வென்று காட்டியவர். அவர் இதுவரை தனியாகவே நின்று தேர்தல் ஆணையத்தில் கட்சிக்கு அங்கீகாரம் பெற்றுள்ளார். அவரைப் போல யாருமே உழைக்கவில்லை. எம்.ஜி.ஆருடன் விஜய்யை ஒப்பிடவே கூடாது. விஜய்யின் பலம் என்ன என்பது இன்னும் 6 மாதத்தில் தெரிந்துவிடும். விஜய் முகத்திற்காகத்தான் இத்தனை லட்சம் பேர் வந்துள்ளனர். எனவே, விஜய் அவராகவே இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர் ஆக முயற்சிக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.