கோயில் உண்டியலை திருடிச் செல்லும் போது கோயில் சுற்றுச் சுவரில் மாட்டிக் கொண்ட கொள்ளையன் அங்கேயே உண்டியலை விட்டு விட்டு தப்பிச் சென்ற சம்பவம் உசிலம்பட்டியில் அரங்கேறியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் அமைந்துள்ளது பெத்தனசாமி திருக்கோயில். இந்த கோயிலின் கதவு திறந்து கிடப்பதை பார்த்த கோயில் பூசாரி அதிர்ச்சியடைந்து, உள்ளே சென்று பார்த்துள்ளார். கோயிலின் கதவை திறந்து கோயிலுக்குள் வைத்திருந்த சூலாயுதம், அம்மன் சிலையில் வைக்கப்பட்டிருந்த கண்மலர் மற்றும் ஆபரணங்கள் திருட்டு போயிருந்தது. கோயில் வளாகத்திற்குள் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது சம்பவத்தன்று இரவு புகுந்த மர்மநபர் கோவில் வளாகத்தில் சாதாரணமாக உலா வருகிறார்.
சாமியின் கண்மலர், அம்மனின் சூலாயுதம் மற்றும் ஆபரணங்களை எடுத்துக்கொண்டு அவற்றை ஒரு துணியில் சுற்றியெடுத்துக் கொண்டுள்ளார். பின்னர் தனது முகம் தெரியாமல் இருக்க கோயிலில் இருந்த கட்டை பையை தன் தலையில் மூடிக்கொண்டு செல்கிறார். இறுதியாக கோயில் உண்டியலை உடைக்க முடியாததால் அதை பெயர்த்து எடுத்து தன் தோளில் வைத்து தூக்கிச் செல்லும் போது சுற்றுச்சுவரில் மாட்டிக் கொள்ளவே அங்கேயே உண்டியலை விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனால் உண்டியலில் இருந்த பணம் தப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக கோயில் நிர்வாகி ராஜசேகர் அளித்த புகாரின் பேரில் சேடபட்டி காவல் நிலைய போலீசார், வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற நபரை தேடி வருகின்றனர்.