fbpx

இதுவும் திருட்டுதான்!… அரசு நிலங்களை அபகரிப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பாயும்!… ஐகோர்ட் கிளை அதிரடி!

அரசு நிலத்தை அபகரிப்பதும் திருட்டுதான். எனவே அரசு நிலத்தை ஆக்கிரமிப்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சேர்ந்த சையது அலி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், எங்கள் பகுதியில் உள்ள பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பான ஒரு வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், தமிழ்நாடு அரசு 2014ல் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுவை அமைத்தது.

இதற்கான மாநில வழிகாட்டுதல் குழுவில் தலைமை செயலாளர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் உள்ளனர். மாதந்தோறும் இந்த குழு கூடி, நீர்நிலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் ஆக்கிரமிப்பு குறித்த புகார்களை விசாரிக்கிறது. அந்த வகையில் பொது இடங்கள் ஆக்கிரமிப்பு குறித்து நோட்டீசை பெறுபவர்கள் தகுந்த அதிகாரி முன் ஆஜராகி தங்களது விளக்கத்தை கொடுக்க வேண்டும். பூமி, மனித வாழ்க்கைக்கு அனைத்தையும் வழங்குகிறது, ஆனால் பேராசையை திருப்திப்படுத்த அல்ல. பேராசைக்காரர்கள் அரசு நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் நெடுஞ்சாலை நிலங்களை ஆக்கிரமித்து, பொது நிலங்களைப் பயன்படுத்த, அடிப்படை உரிமைகளை மீறுகின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலைகளில், பொதுச்சொத்துகள், நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் மக்களின் நலனுக்காகப் பாதுகாக்கப்படுவதையும், பொது மக்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதையும் உறுதி செய்வது அரசின் கடமையாகும். பெரிய அளவில் ஆக்கிரமிப்புகளை செய்பவர்களிடம் ஆதாயத்தை பெற்றுக்கொள்ளும் பேராசை பிடித்தவர்கள், போலி ஆவணங்களை உருவாக்கி, அரசு சொத்துக்களுக்கு பட்டா வழங்கும் விபரீதமான சூழ்நிலையும் உள்ளது. சமீப காலமாக நிலங்களின் சந்தை மதிப்பு பல மடங்கு உயர்ந்து வருவதால் சிலர், வருவாய்த்துறை மற்றும் இதர அரசுத் துறைகளின் அதிகாரிகளின் கூட்டு சேர்ந்து அரசு நிலங்களை ஆக்கிரமிப்பதும் அதிகரிக்கிறது.

இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் முறியடிக்கப்படுவதுடன், மக்களின் நலனுக்காக அரசு சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அரசின் கடமையாகும். அரசு நிலத்தை ஆக்கிரமிப்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிலத்தை அபகரிப்பதும் திருட்டுதான். எனவே, இது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி மட்டுமல்ல, பிற சட்டங்களின்படியும் குற்றமாகும். சமூகத்தில் செல்வாக்கு மிக்க சில நபர்கள், நில அபகரிக்கும் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படுவதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.அரசு உத்தரவின்படி மாநில வழிகாட்டுதல் குழு, மாதத்திற்கு ஒருமுறை தவறாமல் கூடி, செயலாளர்கள் கூட்டத்துடன் பிரச்னைகளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

புகார்கள் மீதான நடவடிக்கையை இணையதளத்தில் வெளியிட வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு சொத்துக்களைப் பாதுகாப்பதில் அதிகாரிகள் அலட்சியமாக இருந்தாலோ, கடமை தவறினாலோ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 12 வாரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் தவறினால் மனுதாரர் மீண்டும் இந்த கோர்ட்டை நாடலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Kokila

Next Post

பிறந்தநாள் பரிசாக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி..? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு..!!

Mon Nov 27 , 2023
துணை முதலமைச்சர் பதவி தொடர்பான கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு முழுவதும் சென்று திமுகவுக்கு பிரச்சாரம் செய்யும் சக்தியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திகழ்கிறார். எனவே இளைஞரணி மாநாட்டுக்குப் பிறகு […]

You May Like