தூத்துக்குடியில் காதலனுடன் இருந்த சிறுமிக்கு காவலர் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அவரை பணிநீக்கம் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் சசிகுமார். இவர், முன்னதாக திருச்செந்தூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்தார். இந்நிலையில், கடந்த 10.10.2019 அன்று இவர் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிக்குச் செல்லாமல் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கோவில் பகுதிக்கு போலீஸ் சீருடையில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, அக்கோயிலில் ஒரு சிறுமி தனது பள்ளி காதலருடன் இருந்துள்ளார். அப்போது அவர்களிடம் சென்று பேசிய சசிகுமார், அச்சிறுமி மற்றும் அவருடைய காதலனை மிரட்டி நிற்க வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். மேலும், பெற்றோர்களுக்கும் அவர்களின் ஊர் மக்களுக்கும் அந்த புகைப்படத்தை அனுப்ப போவதாக கூறி இருவரையும் மிரட்டியுள்ளார் சசிகுமார்.

இதையடுத்து, அவர்களின் பெற்றோருக்கு தெரிவிக்காமல் இருப்பதற்கு லஞ்சமாக ரூ.5 ஆயிரம் பணத்தை கொண்டு வர வேண்டும் என்று நிர்பந்தித்துள்ளார் சசிகுமார். பின்னர் பேசி சிறுமியின் காதலனை அவரது நண்பர்களிடம் சென்று பணத்தை வாங்கி வருமாறு ஊருக்குள் அனுப்பியுள்ளார். இந்நிலையில், தனிமையில் இருந்த அச்சிறுமியிடம் சசிகுமார் அத்துமீறி நடந்துக்கொண்டதாக தெரிகிறது. மேலும், அவர் பாலியல் ரீதியாக அச்சிறுமிக்கு தொல்லை கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அச்சிறுமி அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து காவலர் சசிகுமார் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் விசாரணை நடைபெற்று வந்தது.

விசாரணையில் மேற்படி காவலர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த காவல்துறையின் கட்டுக் கோப்பை சீர்குலைத்து பொதுமக்களின் மத்தியில் காவல்துறையின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல் புரிந்துள்ள காவலர் சசிகுமாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பணியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.