ஆகஸ்ட் 1ம் தேதி முதல் முக்கியமான 300 மருந்து அட்டைகளில் க்யூ ஆர் அல்லது பார் கோடு அச்சிடப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும் என்று மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் மத்திய மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலமாக ஆய்வு செய்யப்படுகிறது. இருந்தாலும் சந்தையில் தரமற்ற மற்றும் போலி மருந்துகள் விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. இதனை தடுக்கவும் முன்னணி நிறுவன பெயரிலான மருந்தின் தரத்தை உறுதி செய்வதற்கும் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.
அதாவது சர்க்கரை நோய்,ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளிட்ட முக்கியமான 300 மருந்துகளின் அட்டைகளில் க்யூ ஆர் அல்லது பார் கோடு அச்சிடப்பட வேண்டும். இதனை ஸ்கேன் செய்யும் போது மருந்தின் உட்கூறுகள் விவரம், தயாரிப்பாளர் விவரம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிய முடியும். இதன் மூலம் மருந்தின் உண்மைத் தன்மையை நுகர்வோர்கள் எளிதில் அறியலாம் எனவும் இந்த நடைமுறை வருகின்ற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.