நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். பிரதமர் மோடி உங்களுக்கு வீடுகளை கட்டித் தருவார் என ராஜஸ்தான் மாநில அமைச்சர் பாபுலால் கராடி பேசியிருப்பது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்தது. அதன்படி, மாநில முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்றுள்ளார். இந்தநிலையில், வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான லட்சிய யாத்திரை நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் உதய்ப்பூரில் நடந்தது. இதில், முதல்வர் பஜன்லால் சர்மா, பழங்குடியின வளர்ச்சித்துறை அமைச்சர் பாபுலால் கராடி கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் பாபுலால் கராடி, “பாஜ தலைமையிலான அரசு பல்வேறு மக்கள் நல திட்டங்களை தொடங்கி உள்ளது. மத்திய அரசு எல்பிஜி சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்துள்ளது. ராஜஸ்தான் அரசு இப்போது உஜ்வாலா திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரூ.450-க்கு சிலிண்டர்கள் கிடைக்கச் செய்கிறது. பசியுடனும் வீடு இல்லாமலும் யாரும் உறங்கக்கூடாது என்பது பிரதமர் மோடியின் கனவாகும். நீங்கள் நிறைய பிள்ளைகளை பெற்றுக்கொள்ளுங்கள், உங்களுக்கு பிரதமர் மோடி வீடு கட்டிக்கொடுப்பார். வேறு என்ன பிரச்னை உங்களுக்கு இருக்கு?” என்றார். அமைச்சர் இவ்வாறு பேசிய போது அங்கிருந்த மக்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.