MI vs RR: 2025 ஐபில் சீசனில் நேற்றையை 50வது லீக் போட்டியில் ராஜஸ்தான்-மும்பை அணிகள் மோதின. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களான ரிக்கல்டன் 3 சிக்ஸர்கள், 7 ஃபோர்கள் என்று அதிரடி காட்டி 38 பந்துகளில் 61 ரன்கள் குவித்த போது ஆட்டமிழந்தார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ரோஹித் சர்மா 9 ஃபோர்கள் உட்பட 36 பந்துகளில் 53 ரன்கள் குவித்தபோது அவுட் ஆனார். இதன் மூலம் ரோஹித் சர்மா புதிய சாதனையையும் படைத்தார். மும்பை அணிக்காக 6000 ரன்களை எடுத்த வீரர் என்ற வரலாற்றை படைத்தார்.
மூன்றாவதாக ஆட வந்த சூர்யகுமார் யாதவ் 3 சிக்ஸர்கள், 4 ஃபோர்கள் என 23 பந்துகளில் 48 ரன்களை எடுத்தார். அவருக்கு அடுத்து ஆட வந்த ஹர்திக் பாண்டியா ஒரு சிக்ஸர், 6 ஃபோர்கள் என 23 பந்துகளில் அவரும் 48 ரன்களை குவித்திருந்தார். மும்பை அணியின் நான்கு வீரர்களுமே சிறப்பாக ஆடி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தனர்.
218 எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 பந்துகளில் 13 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். அவரோடு ஜோடி சேர்ந்து ஆடிய சூர்யவன்ஷி ஒரு ரன் கூட எடுக்காமல் வந்த வேகத்தில் திரும்பினார். மூன்றாவதாக களம் இறங்கிய நிதிஷ் ராணா 11 பந்துகளில் 9 ரன்களும், 4ஆவது வீரராக ஆடிய ரியான் 8 பந்துகளில் 16 ரன்களும் எடுத்த நிலையில் அடுத்தடுத்து வீழ்ந்தனர். ஐந்தாவதாக களம் இறங்கிய துருவ் ஜூரெல், 6ஆவதாக களம் இறங்கிய ஷிம்ரான் ஹெட்மியர் ஆகியோர் முறையே 11 ரன்களும் , ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக விளையாட வந்த துபே 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையிலும், 8 ஆவதாக களம் இறங்கிய ஆர்ச்சர் 27 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். 9 ஆவதாக களம் இறங்கிய மஹீஷ் தீக்ஷனா 2 ரன்களும், 10 ஆவது வீரர் குமார் கார்த்திகேயா 2 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். 11 ஆவது வீரர் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களுக்கு முன்பாகவே அதாவது 16.1 ஓவரில் 117 ரன்களை மட்டுமே ராஜஸ்தான் எடுத்தது. 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3வது இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. சீசனின் முதல் 2 போட்டிகளில் தோல்வி, அடுத்து ஒரு வெற்றி, அடுத்த 2 போட்டிகளில் தோல்வி என அந்த அணி துவண்டு போனது. அதன்பிறகு புயலாக புறப்பட்டு 6 போட்டிகளில் அதிரடியாக வெற்றிபெற்று 6வது கோப்பையை வெல்லும் முனைப்பில் மும்பை அணி உள்ளது.
மும்பை அணிக்கு எதிரான தோல்வியின் மூலம் நடப்புத் தொடரில் இருந்து 2வது அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியேறியது. முன்னதாக சென்னை அணி முதலாவதாக வெளியேறியது. அதாவது கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியாளர்களாக சென்னை – ராஜஸ்தான் அணிகள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.