அண்டார்டிகாவில் 50 ஆண்டுகள் நிலையாக இருந்த பனிப்பாறையில் 8 கிலோமீட்டர் பரப்பளவில் பனி காணாமல் போனது எப்படி என்பது புரியாமல் விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதுவும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பனி முழுவதும் மறைந்துள்ளது. சமீபத்தில் இங்கு ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள், பனிப்பாறை அடுக்கில் கடுமையான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதைக் கண்டனர். அப்போது காட்மன் கிளேசியர் என்று அழைக்கப்படும் இந்தப் பனிப்பாறை 8 கிமீ பரப்பளவு பனியை இழந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களின் கண்டுபிடிப்புகள் “நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்” என்ற இதழில் வெளியானது.
காட்மன் பனிபாறையின் 8 கிமீ பரப்பளவு உடைந்து விழுந்ததால் அந்தப் பனிப்பாறையே உஷ்ணமாகிக் கொண்டிருக்கும் கடல் நீரினால் மேலும் பலவீனமடையும் ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது இன்னும் வேகமாக மீதமிருக்கும் பனியும் அந்தப் பாறையிலிருந்து அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்புகள் துருவ பனி இயக்கவியலில் கவலையளிக்கும் மாற்றங்களை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பிரிட்டிஷ் அண்டார்டிக் ஆய்வுக்குழு, டெலாவர் பல்கலைக்கழகம் மற்றும் லீட்ஸ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் இந்த ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வுக்காக சுமார் 9 செயற்கைக்கோள்கள் அனுப்பிய தரவுகளை இவர்கள் ஆய்வுக்குட்படுத்தினர். இந்த ஆய்வில் நவம்பர் 2018 – 2021 வரை காட்மன் கிளேசியர் அல்லது பனிப்பாறை 8 கிமீ பரப்பளவுக்கான பனியை இழந்துள்ளது தெரியவந்தது.
அதாவது மேலே இருந்து கீழ்நோக்கி பனி உருகுவதல்ல, மாறாக கீழிருந்து மேல்நோக்கி உருகுகிறது. ஐஸ் ஷெல்ஃப் என்பதுதான் பனிப்பாறைகளை தாங்கும் ஆதாரமாகும் ஐஸ் ஷெல்ஃப் காலியாகத் தொடங்கினால், அஸ்திவாரமே ஆடிப்போவது போல்தான். காட்மன் பனிப்பாறையில் 8 கிலோமீட்டர் பனி காணாமல் போனது இத்தகைய நிகழ்வினால்தான். அதாவது, அண்டார்டிகாவின் பனிப்பாறைகள் அதாவது புவியுலகச் சுற்றுச்சூழல், வானிலைகளை தீர்மானிக்கும் பனிப்பாறைகள் கடல் நீர் வெப்பமடைவதால், வெகு வேகமாக காணாமல் போய் வருகின்றன.
அதாவது உருகிக் கடலில் விழுகின்றன. இதனால் உலக அளவில் கடல் மட்டம் அதிகரிக்கும், கடல் நீரில் உப்பில்லாத புதிய நீர் வரத்து அதிகமாகும் போது பெரிய பெரிய புயல்கள் ஏற்பட்டு கடற்பகுதி நகரங்கள் உலகம் முழுவதும் பெரிய அளவில் கடும் பாதிப்புகளைச் சந்திப்பது உறுதி என்கின்றனர் ஆய்வாளர்கள். கடல் நீர் வெப்பமடைதலை மாற்ற முடியாது. ஆனால், குறைக்க முடியும். அப்படி குறைக்கவில்லை எனில் பவளப்பாறைகள் வெளுப்பு, பூமியின் பெரும்பனிபாறைகள் உருகுதல், உக்கிரமான சூறாவளிகள் மற்றும் கடுமையான புயல்கள், ஒட்டுமொத்தமாக கடற்சூழலியலின் ஆரோக்கியம் நாசமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால்தான் விரைவுகதியில் அதிவேகச் சூறாவளிகள் தோன்றி பேரழிவுகளை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றன.