கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான ரயில் நடைமேடையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ சித்தரூத்த சுவாமிஜி ஹூப்பள்ளி நிலையத்தில் உள்ள உலகின் மிக நீளமான ரயில் நடைமேடையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்காக அர்ப்பணித்தார். 1,507 மீட்டர் நீளமுள்ள இந்த நடைமேடை சுமார் 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னதாக பிரதமர் மோடி, கர்நாடக மாநிலம் மாண்டியாவில் நடைபெற்ற விழாவில் பெங்களூர் – மைசூர் நெடுஞ்சாலையை நாட்டுக்காக அர்ப்பணித்து திறந்து வைத்தார்.மேலும், ஹொசப்பேட்டை – ஹூப்பளி – தினைகட் ரயில்வே வழித்தடத்தில் மின்மயமாக்கப்பட்ட தடத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பதுடன் மேம்படுத்தப்பட்ட ஹொசப்பேட்டை ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது அப்பகுதியில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும். ரூ.530 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மின்மயமாக்கல் பணி தடையற்ற விரைந்த ரயில் போக்குவரத்தை ஏற்படுத்தும். மறுசீரமைக்கப்பட்ட ஹொசப்பேட்டை ரயில் நிலையம் பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்கும். ஹம்பி புராதனச் சின்னங்களை நினைவுபடுத்தும் வகையில் இந்த ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது.