வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை 100 இடங்களுக்குள் சுருட்டுவோம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாபானர்ஜி சூளுரைத்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்க கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராவதற்கான கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, ”மத்திய விசாரணை அமைப்புகளை வைத்து பாஜக அரசு அச்சுறுத்துவதாகவும், எத்தனை பேரை கைது செய்தாலும் திரிணாமுல் காங்கிரஸ் பாஜகவிடம் அடிபணியாது என்றும் கூறினார். மத்திய விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகளை பொருட்படுத்தாமல், மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதிலேயே தமது அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் மம்தா குறிப்பிட்டார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றுள்ளதை பாஜக பெருமையோடு கூறி வருவதாகக் குறிப்பிட்ட மம்தா பானர்ஜி, கடந்த 1989ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைவதற்கு முன்பு ராஜீவ்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றுள்ளதை சுட்டிக்காட்டினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் ஓரணியில் திரண்டால் அது பாஜகவை 100 இடங்களுக்குள் சுருட்டுவதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்” என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.