பிச்சைக்காரர் ஒருவர் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மை தான். இந்த பிச்சைக்காரரிடம் ரூ. 7.5 கோடி சொத்துக்களும், 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன. பிச்சை எடுத்ததன் மூலம் இவ்வளவு சொத்துக்களை அவர் சேர்த்து வைத்திருக்கிறார்.
ஆம். உலகின் மிகவும் பணக்கார பிச்சைக்காரர் குறித்து பார்க்க போகிறோம். மும்பையின் பரபரப்பான தெருக்களில், பாரத் ஜெயின் என்ற நபர் பிச்சை எடுத்ததன் மூலம் கோடீஸ்வரராக மாறி உள்ளார். உலகின் பணக்கார பிச்சைக்காரன் என்று அழைக்கப்படும் ஜெயின், தனது அன்றாட வழக்கத்தை ஒரு வெற்றிகரமான நிதி முயற்சியாக மாற்றியுள்ளார்.
பாரத் ஜெயின் குடும்பம் வறுமையில் வாடியது. உணவு வாங்கவோ அல்லது அடிப்படைத் தேவைகளுக்குச் செலுத்தவோ அவர்களிடம் போதுமான பணம் இல்லை. இதன் காரணமாக பாரத் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பே இல்லை. இதனால் அவர் பிச்சை எடுக்க தொடங்கி உள்ளார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக, பாரத் ஜெயின் பிச்சை எடுத்து வருகிறார்.
அவர் ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் வரை ஓய்வு எடுக்காமல் நீண்ட நேரம் வேலை செய்கிறார். சராசரியாக, அவர் ஒரு நாளைக்கு ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை சம்பாதிக்கிறார். அதாவது ஜெயின் ஒவ்வொரு மாதமும் 60,000 முதல் 75,000 வரை சம்பாதிக்க முடியும்.
பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்த நிலையில், அவர் தனது வாழ்க்கையை மாற்றியமைத்தார். தற்போது அவர் ரூ. 7.5 கோடி மதிப்புடையவர், பல சொத்துக்களை சொந்தமாக வைத்திருக்கிறார்.
பிச்சையெடுப்பது அவரது முக்கிய வருமானமாக இருக்கும் அதே வேளையில், பாரத் ஜெயின் தனது செல்வத்தை பெருக்க உதவிய புத்திசாலித்தனமான நிதி முடிவுகளை எடுத்துள்ளார். அவருக்கு மும்பையில் ரூ.1.4 கோடி மதிப்புள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்புகளும், தானேயில் உள்ள இரண்டு கடைகளும் சேர்ந்து, மாதம் ரூ.30,000 வாடகை வருமானம் கிடைக்கிறது. இது, அவருக்கு கூடுதல் நிதிப் பாதுகாப்பை வழங்கியுள்ளன.
ஜெயின் இரண்டு மகன்களும் பிரபலமான கான்வென்ட் பள்ளியில் படித்து இப்போது குடும்ப வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெயின் குடும்பம் ஒரு ஸ்டேஷனரி கடையை நடத்துகிறது, இது அவர்களின் வருமானத்தை அதிகரிக்கிறது. தொடர்ந்து பிச்சை எடுப்பதை அவரது குடும்பத்தினர் எப்போதும் ஏற்கவில்லை என்றாலும், பாரத் ஜெயின் அவர்களின் பேச்சை கேட்கவில்லை.
இதுகுறித்து பேசிய அவர், “நான் பிச்சை எடுப்பதை ரசிக்கிறேன், அதை நான் கைவிட விரும்பவில்லை.” என்று தெரிவித்தார். தனது அதிர்ஷ்டம் இருந்தபோதிலும், பாரத் ஜெயின் பேராசையில் கவனம் செலுத்தவில்லை.
அவர் அடிக்கடி கோயில்களுக்குச் சென்று, ஏழை எளிய மக்களுக்கு நன்கொடை வழங்குகிறார். தான் ஒரு “தாராள மனப்பான்மையுள்ள நபர்” என்றும், தனது வெற்றியை, செல்வத்தை பதுக்கி வைப்பதற்கான ஒரு காரணமாக தான் பார்க்கவில்லை என்றும் ஜெயின் கூறியுள்ளார்.
Read More : உலகின் மர்மமான ஹோட்டல் இது தான்… 105 அறைகள் இருந்தாலும் இதுவரை ஒருவர் கூட இங்கு தங்கியதில்லை.. ஏன் தெரியுமா?