பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், விவசாயிகளின் எதிர்பார்ப்புகளும் எகிறி வருகிறது. இதையடுத்து, தமிழ்நாடு அரசுக்கு முக்கிய கோரிக்கைகளை விவசாயிகள் விடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை, ஒவ்வொரு ஆண்டும் கரும்பு பயிரிடும் விவசாயிகள், அதிக விலைக்கு விற்க முடியுமா? கரும்பு முழுவதும் விற்குமா? என்ற நிலையில் தவிக்கும் நிலைமை ஏற்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே, பொங்கல் பரிசு தொகுப்பில், கரும்பை சேர்த்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு. ஆனாலும், கொரோனா பாதிப்பு காலங்களில், பன்னீர்கரும்பு பயிரிட்ட விவசாயிகள் கடுமையாகவே பாதிக்கப்பட்டனர். முக்கியமாக, 6 அடி உயரமுள்ள கரும்புகளை அரசு கொள்முதல் செய்ய உத்தரவிட்டதால் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. கடந்த பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறுமா? என்ற நிலை ஏற்பட்டது. இதற்காக விவசாயிகள் போராட்டங்களை நடத்தியதையடுத்து, அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.
இப்போது பொங்கல் நெருங்குகிறது. எனவே, பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்த்து, அரசே கொள்முதலும் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் விடுத்துள்ளனர். அத்துடன், 6 அடி நீளம் கரும்பு கொள் முதல் என்பதில் தளர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் விவசாயிகள் விடுத்து வருகின்றனர். இதற்கிடையே, பொங்கல் பரிசுத் தொகுப்பில் பனங்கிழங்கையும் சேர்க்க வேண்டும் என்று மற்றொரு கோரிக்கை கிளம்பியுள்ளது.
வழக்கமாக, ஆடி மாதத்தில் பனங்கொட்டைகளை (பனம் பழங்களை) மண்ணுக்கடியில் புதைத்து, மார்கழி, தை மாதங்களில் விளைந்த பனங்கிழங்குகளை அறுவடை செய்வது வழக்கம். எனவே, இப்போது பனங்கிழங்குகள் அறுவடை துரிதமாகி உள்ளது. ஆனால், பனை தொழிலாளர்களுக்கு பனங்கிழங்கு அறுவடை கூலி, ஏற்றுமதி – இறக்குமதி கூலி என அனைத்திற்கும் கூலி கொடுப்பதால், தங்களுக்கு போதிய அளவில் லாபம் கிடைப்பதில்லை என்று கவலை தெரிவிக்கின்றனர். எனவே, தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவதை போலவே, பனங்கிழங்குகளை அரசே தொழிலாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.
அதுமட்டுமல்ல, ரேஷன் கடைகளிலும் பனங்கிழங்கை தொடர்ந்து விற்பனைக்கு கொண்டு வந்தால், பனைத்தொழிலாளர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றும், பனைத் தொழிலாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் கடனுதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கனவே, தேங்காய் விவசாயிகளிடம் இருந்தே, தேங்காய்கள் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யாக மக்களுக்கு கொடுக்க வேண்டும், கொப்பரைக்கு உரிய விலை வேண்டும் என்று ஏற்கனவே விவசாய சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், பனங்கிழங்கும் ரேஷனில் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.