இந்தியா-கனடா இடையேயான உறவில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்பது கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தான். இவர் கனடாவில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டங்களை தீட்டி குழப்பத்தை ஏற்படுத்தி வந்தார். இதற்கிடையே தான் கடந்த ஜூன் மாதம் கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாரில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.
இந்நிலையில் தான் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இந்த கொலைக்கும், இந்தியாவுக்கும் தொடர்பு உள்ளது. இந்தியாவின் ஏஜென்சி மூலம் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்து இருப்பதாக கூறினார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், கனடா தனது குற்றச்சாட்டில் உறுதியாக உள்ளது. இந்தியாவும் கனடாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெளிநாடுகளுடனான உறவு குறித்து கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.இந்தியா சார்பில் வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் கனடா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது, ”ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் ஐந்து கண் உளவுத்துறை தகவலின் அடிப்படையில் தான் கனடா இந்தியா மீது குற்றம்சாட்டியுள்ளதாக கூறப்படுகிறதே” என்ற கேள்வியை முன்வைத்தனர்.
இதற்கு ஜெய்சங்கர், ”நாங்கள் ஐந்து கண் உளவுத்துறையில் இடம்பெறவில்லை. இதனால் இந்த கேள்வியை தவறான நபரிடம் நீங்கள் கேட்பதாக நினைக்கிறேன். இந்த கேள்வி எனக்கு பொருந்தாது. மேலும் குறிப்பிட்ட வழக்கு தொடர்பான தகவல்களை இந்தியா ஆராய எப்போதும் தயாராக இருக்கிறது” என பதிலளித்தார்.
ஐந்து கண் உளவுத்துறை என்பது ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளை சேர்ந்த அமைப்பாகும். இந்த உளவுத்துறை தான் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ளதாகவும், அதனடிப்படையில் தான் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், தற்போது வரை கனடா இதனை வாய்மொழியாக தான் கூறி வரும் நிலையில் அதற்கான ஆதாரங்களை இந்தியாவிடம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.