தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், முன்னாள் ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள், போலீசார் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ”தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை அதிமுக அரசு உரிய முறையில் கையாளவில்லை. 11 ஆண்கள், 2 பெண்கள் என பட்டப்பகலில் துள்ளத் துடிக்க சுட்டுக் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்தனர், 60 பேர் சிறு காயமடைந்தனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அதிமுக அரசின் ஆணவத்திற்கு 13 உயிர்கள் பலியாகின. கேட்போரை ரத்தம் உறையவைக்கும் சம்பவம் குறித்து தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டதாக கூறியது உண்மைக்கு மாறானது. கடப்பாரையை விழுங்கிவிட்டு கசாயம் குடித்துவிட்டேன் என்று கூறும் பழமொழியை விட மிகப்பெரிய பொய் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையமே எடப்பாடி பழனிசாமி சொன்ன அந்த பொய்யை அம்பலப்படுத்தியுள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே தலா ரூ.20 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், கூடுதலாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்தார். துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்டோருக்கு கல்வி தகுதிக்கேற்ப வேலையை அதிமுக ஆட்சி வழங்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த சம்பவம் தொடர்பாக 4 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள், போலீசார் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் அனைவரும் கூண்டில் ஏற்றி தண்டிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.