ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்கள் விரும்பும் நாட்டுக்கு செல்ல அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று இயக்குனர் கவுதமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ’’முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு உச்சநீதிமன்றம் பல முறை விடுதலை செய்ய உத்தரவிட்டும் அதிகாரத்தை ஆளுநர் கையில் கொடுக்கப்பட்டதால் நீதியை நிலைநாட்டவில்லை. காலம் தாழ்த்தி வந்தநிலையில் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றமே தனது கையில் எடுத்து முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகியோரை விடுதலை செய்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது.
விடுதலையானவர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்குள் நான்குபேரை அகதிகள் என்ற காரணத்தால் திருச்சி சிறப்பு முகாமில் சக அகதிகளை சந்திக்கவிடாமல் தனி அறையில் சிறை வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம். இந்த செயலுக்கு நான் கண்டனம் தெரிவிக்கின்றேன். தமிழக அரசு உடனடியாக அவர்களை திறந்த வெளிக்குள் அனுமதித்து விரும்பும் நாட்டிற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்ய வேண்டும்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், அவர்கள் நான்கு பேரையும் இலங்கைக்கு அனுப்ப உள்ளதாக நேற்று தெரிவித்துள்ளார். இது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தமிழ்நாடு அரசும் காவல்துறையும் முடிவு செய்யாமல் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட வாய்ப்பில்லை. ’’ என அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.