கொரோனா பரவல் அதிகரிப்புக்கு மத்தியில், ஹரியானா மாநில அரசு, பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம் என்று அறிவித்துள்ளது..
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000, 3000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 5000-ஐ தாண்டி பதிவாகி வருகிறது.. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது…
இதன் காரணமாக பல மாநிலங்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.. அந்த வகையில் ஹரியானா மாநில அரசு, பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம் என்று அறிவித்துள்ளது.. 100க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் மால்கள், வணிக மையங்கள் மற்றும் அரசாங்க அலுவலகங்கள் போன்ற பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று அறிவித்தது.
கொரோனா பரவலுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் “ 100க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் பொது மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹரியானாவின் அனைத்து பகுதிகளிலும் இது செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதனிடையே கர்ப்பிணிப் பெண்கள், முதியோர் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.. அதே போல் டெல்லியில், மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் மருந்தகங்களில் பரிசோதனையை அதிகரிக்க சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தை பொறுத்த வரை, கொரோனா பாதிப்பு க்ளஸ்டர் பரவலாக இல்லை. அதாவது கொத்து கொத்தாக கொரோனா பரவவில்லை.. தனித்தனியாகவே பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. புதிய திரிபு வீரியம் குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவைப்படும் அளவுக்கு பாதிப்பு இல்லை. எனவே பொதுமக்கள் யாரும் பயப்பட தேவையில்லை.. கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்தால் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..