மிக்ஜாம் புயல் குறித்த முன்னறிவிப்பு 10 நாட்களுக்கு முன்பாகவே வெளியிடப்பட்ட போதிலும், புயலால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை தடுப்பதிலும், குறைப்பதிலும் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்களின் படி, சென்னையின் சில பகுதிகளில் முதல் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 29 செ.மீயும், 48 மணி நேரத்தில் 49 செ.மீயும் மழை பெய்துள்ளது. இது ஒப்பீட்டளவில் அதிக மழை தான் என்றாலும் கூட, சமாளிக்க முடியாத மழை அல்ல. கடந்த காலங்களில் இதைவிட கூடுதலான மழை பெய்திருக்கிறது. தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் பாதிப்புகளை தடுக்க முடியாது என்றாலும், குறைத்திருந்திருக்கலாம்.
எந்தெந்த பகுதிகளில் கடந்த இரு ஆண்டுகளில் மழைநீர் வடிகால்கள் புதிதாக அமைக்கப்பட்டனவோ, அந்தப் பகுதிகளில் எல்லாம் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. அதற்கு காரணம் ரூ.4,000 கோடி செலவில் மழை நீர் வடிகால்கள் எந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்டனவோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றவில்லை என்பது தான் உண்மை.
சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை – வெள்ளம் வடியாததால் 50% பகுதிகளுக்கு இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை. பல பகுதிகளில் இன்னும் தொலைதொடர்பு இணைப்பு சீரமைக்கப்படவில்லை. மழை, வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளில் சிக்கிக் கொண்ட மூத்த குடிமக்கள் இதுவரை மீட்கப்படவில்லை. அத்தகைய சூழலில் உள்ள மக்கள் மரண வேதனையை அனுபவித்து வருகின்றனர்.
மழை பாதிப்புகள் குறித்த செய்திகள் மக்களைச் சென்றடைவதை தடுப்பதில் காட்டும் அக்கறையை, மழை நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவதில் அரசு காட்டவில்லை. நிவாரணப் பணிகள் சிறப்பாக நடைபெற்றது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதை விடுத்து, உண்மையாகவே நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தி, மக்களின் துயரங்களைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழை, வெள்ளத்தால் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் அனைத்து குடும்பங்களும் பொருளாதார இழப்பையும், வாழ்வாதார இழப்பையும் சந்தித்துள்ளன. சென்னை மாநகர மக்களின் துயரங்களை ஓரளவாவது போக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் தலா ரூ.10,000 நிதியுதவி வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.