தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில், ஆங்காங்கே பூமி குளிர சாரல் மழையும் பெய்து வருகிறது. இன்னும் சில நாட்களில் நாட்டின் பல மாநிலங்களில் அனல் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வருகிற 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.