திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் வருடாந்திர உற்சவங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது வைகுண்ட ஏகாதசி விழாவாகும். மார்கழி மாதத்தில் நடைபெறும் இவ்விழா தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்படும். அதன்படி ஜனவரி 10 முதல் 19ம் தேதி வரை திருப்பதியில் சொர்க்கவாசல் திறக்கப்படும். இந்த 10 நாட்களும் வைகுண்ட துவாரம் எனப்படும் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இதனால் இவ்வழியாகச்சென்று ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனை காண இலவச தரிசன கட்டணம் நேற்று அதிகாலை முதல் வழங்கப்படும் நிலையில், முந்தைய தினமே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. வரலாறு காணாத நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி மரண சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பதி கோவிலில் பக்தர்கள் பலியான சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் டிஎஸ்பியை பணியிடை நீக்கம் செய்து ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு திருப்பதி காவல் கண்காணிப்பாளர் சுப்பா ராயுடு, தலைமை பாதுகாப்பு அதிகாரி ஸ்ரீதர் மற்றும் எண்டோமென்ட்ஸ் இணை நிர்வாக அதிகாரி கௌதமி ஆகியோரை பணியிட மாற்றம் செய்தார். மேலும் டிஎஸ்பி ரமணகுமார் மற்றும் கோஷாலா பொறுப்பாளர் ஹரிநாத் ரெட்டி ஆகியோர் தங்கள் கடமைகளை செய்ய தவறியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து, கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பக்தர்களிடம் நலம் விசாரித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது; கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது என அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். கோவிலின் புனிதம் கெட்டுவிடாத அளவுக்கு பணியாளர்கள் செயல்பட வேண்டும். என்றார்.