சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த திருப்பூரைச் சார்ந்த கோழிக்கடை உரிமையாளருக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றம் 20 ஆண்டு தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது.
தர்மபுரியைச் சார்ந்த முருகன் (38)என்பவர் திருப்பூர் முருகானந்தபுரத்தில் சொந்தமாக கோழிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர்.
புகாரை விசாரித்த காவல்துறை குற்றவாளி முருகனை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒத்துக்கொண்டார் முருகன். மேலும் அவருக்கு எதிரான சாட்சியங்களையும் கொண்டு அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது மாவட்ட மகளிர் காவல் நிலையம்.
கடந்த மூன்று ஆண்டுகளாக திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் மீதான இறுதி கட்ட விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது.
இந்த விசாரணையில் முருகன் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று வருடங்களாக தொடர்ந்து போராடி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த அனைத்து மகளிர் காவல் நிலையத்தை மக்கள் பாராட்டினர்.