திருவள்ளூர் மாவட்டம் ராஜாஜி புரம் கலைவாணர் தெருவை சேர்ந்த அசோக் என்பவர் அவருடைய நண்பர் சுதர்சன் என்பவர் உடன் இணைந்து ராகவேந்திரா பார்மா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் என்ற பெயரில் மருந்து ஏஜென்சி ஒன்றை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சுதர்சன் கடந்த 2014 ஆம் வருடம் சாலை விபத்தில் உயிரிழந்தார். ஆகவே இந்த இரண்டு மருந்து ஏஜென்சிகளின் உரிமத்தின் பெயர்களை சுதர்சனின் மனைவி அனுராதாவின் பெயரில் மாற்றம் செய்ய அசோக் முயற்சித்தார்.
இதற்காக திருவள்ளூர் மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று அசோக் விண்ணப்பம் செய்தார். அப்போது அங்கு இருந்த உதவி இயக்குனர் விஜயராகவன் 20000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அசோக் விஜயராகவனுக்கு லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாததால் காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு ஆய்வாளரிடம் புகார் வழங்கினார். அதன்படி விஜயராகவன் பணத்தை பெறும் போது கைது செய்யப்பட்டார்.
அதன் பிறகு இந்த வழக்கை விசாரணை செய்ய திருவள்ளூர் தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி லஞ்சம் கேட்ட குற்றத்திற்காக விஜயராகவனுக்கு 1 வருட கால கடுங்காவல் தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் அதோடு புகார்தாரரிடம் இருந்து லஞ்சப் பணத்தை கேட்டு பெற்ற குற்றத்திற்காக 2 வருட காலங்காவல் தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பை எதிர்க்கும் விதமாக, விஜயராகவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கிழமை நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தவுடன் விஜயராகவன் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி ஆர் வேலரஸ் விஜயராகவனுக்கு எதிராக அரஸ்ட் வாரண்ட் பிறப்பித்தார். இதன் அடிப்படையில், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் கலைச்செல்வம் தலைமையிலான திருவள்ளூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல்துறையினர் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.