டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டி உள்ள நிலையில், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இதுகுறித்து இன்று விளக்கம் அளித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருக்கிறார்கள். அதில், 1000 கோடி முறைகேடு என்று பொதுவாக குற்றம்சாட்டி உள்ளனர். எந்த முதல் தகவல் அறிக்கை, எந்த வருடம் போடப்பட்ட எஃப்.ஐ.ஆர். எந்த மாதிரியான எஃப்.ஐ.ஆர் என்பது முழுமையாக தெரிவிக்கப்படவில்லை. குடும்ப சூழல், மருத்துவ காரணங்கள் உள்ளிட்ட காரணங்களால் பணியிட மாறுதல் டாஸ்மாக்கில் வழங்கப்பட்டு வருகிறது. அதில் எந்தவித தவறுகளும் இல்லை. ஆனால் அதில் தவறுகள் நடந்தது போல தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார்.
மதுபான உற்பத்தி ஆலை, கொள்முதல் ஆகியவற்றுக்கு வெளியே டெண்டர் எடுக்கலாம். ஆனால் 4 ஆண்டுகளால் டாஸ்மாக் நிறுவனத்தில் பார் டெண்டர், ஆன்லைன் டெண்டாராக மாறிவிட்டது. 1000 கோடி முறைகேடு என்பது எந்த வித முகாந்திரமும் இல்லாமல் பொதுவாக சொல்கின்றனர். முதலில் டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடி ஊழல் என்று ஒருவர் கூறுகிறார். அதன்பின்னர் அமலாக்கத்துறையும் அதையே கூறுகிறது.. அமலாக்கத்துறை சோதனைகளை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். வெளிப்படைத்தன்மை உடன் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எந்த உள்நோக்கத்தையும் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
டாஸ்மாக் நிறுவனம் புதுப்பொலிவுடன் செயல்பட்டு வருகிறது. இன்னும் பல பணிகள் செய்யப்பட உள்ளன. டெண்டர்கள், கொள்முதல் என அனைத்திலும் வெளிப்படைத்தன்மை உடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒன்றிய அரசு அமலாக்கத்துறையை ஏவுகிறது. ஆனால் அவர்களின் முயற்சிகள் ஒருபோதும் பலிக்காது.
தொகுதி மறுவரையறை, மும்மொழிக்கொள்கை ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தின் அடித்தட்டு மக்கள் வரை சென்றிருக்கிறார். தமிழக மக்கள் முதல்வர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது..” என்று தெரிவித்தார்.
Read More : Tn Budget 2025 : பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை.. பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு..