கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர், வனக்காவலர், ஆவின் ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நாளை நடைபெறவுள்ளது. 6,244 பணியிடங்களுக்கான இந்த தேர்வை சுமார் 2லட்சம் பேர் எழுதவுள்ளனர். நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இந்த தேர்வு நடைபெறும்.
தேர்வர்கள் நாளை காலை 8.30 மணிக்கு முன்னர் அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் தேர்வுக்கூடத்திற்கு வருகைப்புரிய வேண்டும். தவறினால் அவர்கள் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். காலை 09.00 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், 12.45 மணி வரை தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதி கிடையாது.
தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு உள்ளே செல்போன் மற்றும் மின்னணு கடிகாரம் (Electronic Watches), புளூடூத் (Bluetooth) போன்ற மின்னணு உபயோகப் பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை. 09.06.2024 முகூர்த்த தினம் என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்க வாய்ப்புள்ளதால், தேர்வர்கள் தேர்வுக் கூடத்திற்கு 1 மணிநேரம் முன்னதாக செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வர்கள் தங்கள் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.