01.01.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்களின்படி, “சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2024-இன் முன் திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வாக்காளர்களை சரிபார்க்க அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீட்டுக்கு வீடு சரிபார்ப்பு பணி 21.07.2023 முதல் தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ளது.
வீட்டுக்கு வீடு சரிபார்ப்பு காலத்தின்போது, கீழ்க்காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்:-
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டிலும் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களின் விவரங்களையும் சரிபார்ப்பர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தங்கள், ஆதார் எண்ணை இணைக்க, இடமாற்றம் செய்ய விரும்பும் வாக்காளர் அவரவர் வீட்டிலேயே செய்துகொள்ளலாம். 01.10.2023 தேதியன்று 18 வயது பூர்த்தியடைபவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
பொதுமக்கள் உரிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, நடப்பு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க, குடியிருப்பை ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாற்றினாலோ அல்லது தற்போது வசிக்கும் தொகுதிக்குள்ளேயே மாற்றிட, மாற்றுத்திறனாளி என குறிப்பதற்கு, இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என இந்தியத் தேர்தல் ஆணையம் கேட்டுகொண்டுள்ளது.