இது குறித்து முதுகலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் பெருமாள்சாமி தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை கடிதத்தில்; தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 13,300 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக கல்வித்துறை அறிவித்தது. இந்தப் பணியிடங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு காலதாமதம் ஆகும் என்பதால், தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் இதுவரை 2,000ஆசிரியர்கள் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவித்த ரூ.7,500, ரூ.10,000, மற்றும் ரூ.12,000 சம்பளம் மிக மிக குறைவு என்பதால் இந்தப் பணிக்கு வருவதற்கு யாரும் முன் வரவில்லை. காலாண்டுத் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், ஆசிரியர்கள் இல்லாமல் அரசுப் பள்ளி மாணவர்கள் பெரும் தவிப்பிற்கு ஆளாக உள்ளனர்.
முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 4,000 காலியாக இருப்பதால் பொதுத்தேர்வு எழுத உள்ள 11, 12-ம் வகுப்பு மாணவர்களின் கல்வியும் கேள்விக்குறியாகியுள்ளது. முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் முடித்து தேர்வு பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இவர்களைப் பணி நியமனம் செய்வதற்கானப் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. மாணவர்கள் நலனைக்கருத்தில் கொண்டு, போர்க்கால அடிப்படையில் முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.