பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகிறார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத். இதன் ஒரு பகுதியாக வேலூர் கோட்டையில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.
சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அர்ஜுன் சம்பத் போதை மாபியா சாராய மாபியா மற்றும் லாட்டரி கும்பல்களிடமிருந்து பெற்ற நிதியை கொண்டுதான் திமுக தேர்தலை சந்திக்கிறது என குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் தமிழகத்தில் தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என்றால் திமுக தலைமையிலான அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார். இதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
மேலும் நாடு முழுவதும் நேற்று அமலுக்கு வந்த இந்திய குடியுரிமைச் சட்டத்தை வரவேற்பதாக தெரிவித்த அவர் இதனால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என கூறினார். மேலும் CAA சட்டம் இஸ்லாமியர்களை பாதிக்கும் என்பதை நிரூபித்தால் அவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசளிப்பதாகவும் சவால் விட்டார். மேலும் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய்க்கு எதிராகவும் தனது கண்டனத்தை பதிவு செய்தார் அர்ஜுன் சம்பத்.
இது தொடர்பாக பேசிய அவர் விஜய் இந்திய குடியுரிமை சட்டத்தைப் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமல் பேசுகிறார் என தெரிவித்தார். மேலும் ஜோசப் விஜய்யை கிறிஸ்தவ மதியா கும்பல்கள் பின்னிருந்து இயக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்திய குடியுரிமை சட்டத்தின் மூலம் இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படுவதற்கு வருத்தம் தெரிவித்த அர்ஜுன் சம்பத் அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க பிரதமரிடம் கோரிக்கை வைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.