தமிழகத்தை வஞ்சித்த பாஜகவையும் தமிழகத்தை பாழ்படுத்திய அதிமுகவையும் ஒரு சேர வீழ்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பிரச்சாரம் செய்துள்ளார்.
நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி தேதி தொடங்கி அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக நாளை மறுநாள் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், இறுதிகட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக அனல்பறக்க நடந்து வந்த பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் இன்று காலை முதலே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் வீடியோ மூலம் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்.
அதில் அவர் கூறுகையில் வணக்கம் , நல்லாயிருக்கீங்களா? ஏப்ரல் 19ஆம் தேதி நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் நாள். நாட்டோட எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது. உங்கள் வாக்கு உங்கள் தொகுதி எம்பியை மட்டும் தேர்வு செய்வதற்கான வாக்கு இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக நம் நாட்டை நாசப்படுத்திய பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாக்கு இது! இனி இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது.
அரசியல் சட்டத்தை காப்பாற்ற நடத்துற தேர்தல், மதம், ஜாதி கடந்து மக்கள் ஒற்றுமையாக வாழ உங்கள் வாக்குதான் வலிமையான ஆயுதம். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் என்னென்ன திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறேன் என்பது உங்களுக்கே தெரியும்.
மாதாமாதம் மகளிருக்கு ரூ 1000 வழங்கக் கூடிய கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்ய விடியல் பயணம் திட்டம் , பள்ளி குழந்தைகள் காலையில் பசியில்லாமல் படிக்க முதல்வரின் காலை உணவுத் திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு ரூ 1000 வழங்கக் கூடிய புதுமைப் பெண் திட்டம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தர நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி என ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உற்ற துணையாக திராவிட மாடல் அரசு இருந்து வருகிறது. இந்த சாதனைகள் அனைத்தும் இந்தியா முழுக்க எதிரொலிக்க I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பெயர்களையும் தொகுதிவாரியாக குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.