Mahashivaratri: மகா சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு இரு நாட்களுக்கு முன் வரக்கூடிய சதுர்த்தசி திதியில் சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி விரத தினம் கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு மகாசிவராத்திரி இன்று (மார்ச் 8) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட உள்ளது. இந்த அற்புத தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை தரிசிப்பத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்.
சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு மயங்கிக் சாய்ந்தார். அப்போது சிவபெருமானை தேவர்கள் பூஜித்த காலம் சிவராத்திரி. பிரளய காலத்தில் உலகம் முற்றிலுமாக அழியாமல் இருக்க இந்த அகிலத்தின் அன்னையான அகிலாண்டேஸ்வரி, ஈசனை சிவராத்திரி அன்று நான்கு ஜாமத்திலும் பூஜை செய்தார்.
சிவராத்திரி அன்று பல மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அபிஷேகங்கள் செய்ய முடியாதவர்கள், தண்ணீரையும், வில்வ இலையையும் சர்வேஸ்வரனுக்கு சமர்பித்து, வெல்லம், பச்சரிசியையும் நைவேத்தியமாக படைத்து வணங்கி, ஓம் நமசிவாய – ஹர ஹர மஹாதேவ என்ற மந்திரத்தை உச்சரித்தாலே சகல நன்மைகளும் தருவார் சிவபெருமான் என்பது நம்பிக்கை. சிவராத்திரி அன்று இரவில் உலகிலுள்ள எல்லா லிங்கங்களிலும் சிவன் தோன்றுகிறார் என்பது ஐதீகம். மகாசிவராத்திரி நாளில் இரவெல்லாம் கண் விழித்து சிவபெருமானை வழிபட வேண்டும். இதனால் இறைவன் அருள் கிடைப்பதோடு நினைத்த காரியம் நடக்கும்.
எல்லோராலும் கோவிலுக்கு செல்ல முடியாது. கோவிலில் சிவனுக்கு நடைபெறும் அபிஷேகத்தை காண முடியாதவர்கள் நம்முடைய வீட்டிலேயே பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து இரவு முழுவதும் சிவபுராணம் படிக்கலாம். நமச்சிவாய மந்திரத்தை சொல்லி வில்வ இலையால் அர்ச்சனை செய்யலாம்.
சிவராத்திரி நாளான இன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும். சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். மகா சிவராத்திரி வழிபாட்டில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் படிக்கலாம், கேட்கலாம். இரவு கண்விழித்து சிவபூஜை செய்யவேண்டும். ஓம் நமசிவாய என்ற சிவ மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும். சிவ ஆலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் பங்கேற்றால் சகல தோஷங்களும் நீங்கி புண்ணியம் கிடைக்கும்.
மகா சிவராத்திரியின் புனிதமான சந்தர்ப்பத்தில், பக்தர்கள் அரிசி, கோதுமை அல்லது பருப்பு வகைகளில் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மகா சிவராத்திரி நாளில் இறைச்சி, கோழி மற்றும் பிற அசைவ உணவுகளை உட்கொள்ளக்கூடாது. இது தவிர, தாமச குணம் கொண்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும். மகா சிவராத்திரி நாளில் மது அருந்தக் கூடாது.
Readmore: உக்ரைன் போர் பகுதிக்கு இந்தியர்களை கடத்தும் முயற்சி முறியடிப்பு!… CBI அதிரடி!