நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படுமா? என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார்.
நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், மாநிலங்களவையில் இன்றுபேசிய திமுக எம்பி வில்சன், “சாலை அமைக்க முதலீடு செய்தவர்கள் சுங்கச்சாவடிகள் மூலம் அதற்கான தொகையை வசூல் செய்து கொள்கின்றனர். முதலீடு தொகை முழுவதுமாக வந்த பிறகு சுங்கச்சாவடிகள் அகற்றப்படுமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
திமுக எம்பியின் கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “முன்பு டோல் என்று அழைக்கப்பட்ட கட்டணம், தற்போது பயன்பாட்டு கட்டணம் என்று மாற்றப்பட்டுள்ளது. இது நிரந்தரமானவை. தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளின்படி தான் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒருவேளை முதலீடு செய்த பணம் மீண்டும் கிடைத்துவிட்டால், சுங்கச்சாவடிகளை மூடுவது தொடர்பாக எந்த யோசனையும் இல்லை.
ஒரு சாலை தனியார் உதவியுடன் அமைக்கப்படுகிறது என்றால், அதற்கான கட்டணத்தை ஒப்பந்த காலம் முடியும் வரை வசூல் செய்து கொள்ளலாம். ஒப்பந்தம் முடிந்த பின் நேரடியாக அரசோ அல்லது அரசு கை காட்டும் அமைப்போ கட்டணம் வசூலிக்கும். இந்த கட்டணம் ஆண்டுதோறும் திருத்தி அமைக்கப்படும். இதனால் சுங்க சாவடியை மூடுவது என்கிற பேச்சுக்கே இடம் கிடையாது. தமிழ்நாட்டில் 1,046 கி.மீ. தூரத்திற்கு ரூ.38,359 கோடி செலவில் 48 நெடுஞ்சாலை பணிகள் நடக்கின்றன. இது 2027 பிப்ரவரி மாதத்திற்குள் முடியவடையும்” என்று தெரிவித்தார்.