ஒருபுறம் கொரோனா வைரஸ் மறுபுறம் குரங்கு அம்மை என கேரள மாநிலம் பல்வேறு நோய்களை எதிர்த்து போராடி வரும் சூழலில் தக்காளி காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.. அம்மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் இந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதன் விளைவாக தக்காளி காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்த நோய் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் முழுவதும் சிவப்பு, தக்காளி போன்ற கொப்புளங்கள் மற்றும் சொறி உருவாகும் என்பதால், காய்ச்சலுக்கு ‘தக்காளி காய்ச்சல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நோய் மேலும் பரவாமல் இருக்க கேரளாவின் அண்டை மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? பொதுவாக உருண்டையான மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும் கொப்புளங்கள், சொறி மற்றும் அரிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பிறகு ஏற்படும் அறிகுறிகளால் இந்த தக்காளி காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த நோய் முக்கியமாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஏற்படுகிறது.
காய்ச்சல் வைரஸால் ஏற்படுகிறது என்பதை விஞ்ஞானிகள் உறுதிசெய்துள்ள நிலையில், வைரஸ் எந்த குடும்பத்தைச் சேர்ந்தது என்பதை அவர்கள் இன்னும் கண்டறியவில்லை. குறிப்பிடத்தக்க வகையில் இது ஆபத்தான தொற்றுநோயாக இருந்தாலும், இந்த நோய் கடுமையான உயிருக்கு ஆபத்தான அபாயங்களை ஏற்படுத்தாது.
தக்காளி காய்ச்சலின் அறிகுறிகள்
சிவப்பு கொப்புளங்கள், தோல் எரிச்சல் மற்றும் நீரிழப்பு ஆகியவை தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்படும் போது குழந்தைகள் அனுபவிக்கும் முதன்மை அறிகுறிகளாகும். கூடுதலாக, சோர்வு, கை மற்றும் கால்களின் நிறம் மாறுதல், மூட்டு வலி, வயிற்றுப் பிடிப்புகள், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, இருமல் போன்றவற்றால் குழந்தைகள் பாதிக்கப்படலாம்.
வேறு சில அறிகுறிகள்
- காய்ச்சல்
- தடிப்புகள்
- நீரிழப்பு
- கொப்புளங்கள்
- குமட்டல்
- வாந்தி
- குளிர்
- இருமல்
- தலை மற்றும் உடல் வலி
தக்காளி காய்ச்சலுக்கான காரணங்கள் : நோய்க்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், இது ஒரு அரிய வகை வைரஸ் தொற்றாகக் கருதப்படுகிறது, மேலும் சிலர் இது சிக்குன்குனியா அல்லது டெங்குவின் பின்விளைவு என்று ஊகிக்கிறார்கள்.
சிகிச்சை : 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுவதால், குழந்தைகளுக்கு சரியான சுகாதாரத்தை உறுதி செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். குழந்தைகள் மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளைக் காட்டினால், விரைவில் மருத்துவரை அணுகுவது அவசியம். பாதிக்கப்பட்டவர்கள் கொப்புளங்களில் சொறிவதைத் தவிர்க்க வேண்டும் மற்றும் தூய்மை மற்றும் சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும். சரியான நீரேற்றத்துடன் ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.