இந்தியா முழுவதும் காலியாக உள்ள கிராமின் டக் சேவக் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்தியா போஸ்ட் வெளியிட்டுள்ளது.. தபால் அலுவலக கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் தபால் துறை 40,889 காலியிடங்களை நிரப்பவுள்ளது. கிராமின் டக் சேவக், கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட்மாஸ்டர் ஆகியவற்றுக்கான விண்ணப்ப செயல்முறை ஜனவரி 27, 2023 அன்று தொடங்கியது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (பிப்ரவரி 16, 2023) கடைசி நாளாகும்.. பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 19 வரை மூன்று நாட்களுக்கு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.. மேலும் தகவலுக்கு www.indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.
தகுதி வரம்பு: இந்த பணியிடங்களுக்கான வயது வரம்பு 18-40க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 10-ம் வகுப்பில் ஆங்கிலம் அல்லது கணிதம் கட்டாயம் ஒரு பாடமாக இருந்திருக்க வேண்டும்.. மேலும், விண்ணப்பதாரர்கள் தங்கள் பகுதியின் உள்ளூர் மொழியை குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் போதுமான கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு கட்டாயம் சைக்கிள் ஓட்ட தெரிய வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது: விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை www.indiapostgdsonline.in என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வேறு எந்த விண்ணப்ப முறையும் ஏற்றுக்கொள்ளப்படாது. ஏதேனும் கேள்விகள் மற்றும் உதவிக்கு, விண்ணப்பதாரர்கள் பிரிவு வாரியான ஹெல்ப் டெஸ்க்கை தொடர்பு கொள்ளலாம்.. உதவி மொபைல் எண்கள் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.
கட்டணம் செலுத்துதல்: SC/ST மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை, மற்ற விண்ணப்பதாரர்களுக்கு 100 ரூபாய் செலுத்த வேண்டும்.