சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளது. சென்னையில் மாலை ஐந்தரை மணி அளவில், சிறப்பு உபகரணங்கள் ஏதுமின்றி, வெறும் கண்ணால் நிலவின் அழகைக் கண்டு மகிழலாம்.
சந்திர கிரகணம் என்பது பூமியின் நிழல் நிலவின் மீது விழும்போது ஏற்படுவது. பூமியின் நிழல் கரு நிழலாக விழும் பகுதி Umbra என்றும் அதன் புற நிழல் பகுதி Penumbra என்றும் அழைக்கப்படுகிறது. கரு நிழலானது நிலவின் மீது முழுவதும் விழுவது முழு சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சந்திர கிரகணம் முழு நிலவு நாளில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும். சூரியன், பூமி மற்றும் சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படும். முழு நிலவு பூமியின் நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணமும், சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும் போது பகுதி சந்திர கிரகணமும் ஏற்படும்.
![நாளை முழு சந்திர கிரகணம்..!! தமிழ்நாட்டில் எப்போது பார்ப்பது..? எப்படி பார்ப்பது..?](https://1newsnation.com/wp-content/uploads/2022/11/lunar-16678096643x2-1-1024x683.jpg)
நாளை (நவ.8) முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் முழு சந்திர கிரகணத்தை பார்க்க இயலாது. ஏனெனில் சந்திர உதயத்திற்கு முன்பாகவே மொத்த நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கும். முழு மற்றும் பல்வேறு பகுதி வடிவ நிலைகளின் முடிவினை நாட்டின் கிழக்குப் பகுதிகளில் காண முடியும். இது தொடர்பாக அறிவியல் பலகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தியாவின் கிழக்கு பகுதிக்குச் செல்லச் செல்ல சந்திர கிரகணத்தை பார்க்க இயலும். இந்தப் பகுதிகளில், சந்திர கிரகணம் பொதுவாக எல்லா இடத்திலும் ஒரே நேரத்தில் ஏற்படும். மேற்கு வானில் சூரியன் அந்தி சாயும் போது, கிழக்கு வானில் நிலவு வெளிப்படும் நேரத்தில் குறைவான காலகட்டத்தில் பகுதி சந்திர கிரகணத்தை பார்க்க முடியும்.
![eclipse](https://1newsnation.com/wp-content/uploads/2021/05/Lunar-Eclipse-1_AP-1024x683.jpg)
இந்த கிரகணம் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் தென்படும். தமிழ் நாட்டில் சென்னையில், சந்திரன் உதிக்கும் நேரம் இந்திய நேரப்படி 5 மணி 39 நிமிடங்கள். சந்திர கிரகணத்தை 40 நிமிடங்கள் காண முடியும்.
சந்திரனின் புறநிழல் பகுதி தொடக்கம்: மதியம் 1:30:16
சந்திரனின் கருநிழல் பகுதி தொடக்கம் மதியம் 2:38:33
முழு சந்திர கிரகணம் தொடக்கம் மதியம் 3:45:57
முழு சந்திர கிரகணம் ஏற்படும் நேரம் மாலை 4:18:49
முழு சந்திர கிரகணம் முடிவுறும் நேரம் மாலை 5:11:40
சந்திர கிரகணம் கரு நிழல் பகுதி விலகல்: மாலை 6:19:03
சந்திர கிரகணம் புற நிழல் பகுதி விலகல் இரவு 7:27:29
வெள்ளை ஒளிக்குள் ஏழு நிறங்கள் இருப்பது நீங்கள் அறிந்ததே. அதில் நீல ஒளியானது பூமியின் வளிமண்டலத்தில் ஒளிச் சிதறல் அடைகிறது, இதன் காரணமாக வானம் நீல நிறமாக இருக்கிறது. அதேபோல ஒளியானது வளிமண்டலத்தின் வழியே செல்லும் போது சிவப்பு நிறமானது ஒளி விலகள் அடைகிறது. அது நிலவின் மீது படுகிறது, இதன் காரணமாக நிலவு சிவப்பு நிறமாக காணப்படுகிறது”. இவ்வாறு அறிவியல் பலகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து அடுத்த சந்திர கிரகணம் அக்டோபர் 28, 2023 அன்று பார்க்க முடியும். அதுவும் ஒரு பகுதி சந்திர கிரகணம் ஆகும்.