பொதுவாக நம் முன்னோர்கள் காலத்தில் சாப்பிட்டு வந்த உணவுகள் பெரும்பாலும், மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தவையாக இருந்தன. அந்த வகையில், ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும், மருத்துவ குணம் வாய்ந்தவையாகவும் இருக்கும் உணவுதான் உளுந்து களி. இந்தியாவில் பல பகுதிகளில் இந்த உளுந்து களி மிகசிறந்த உணவாக கருதப்பட்டு வருகிறது.
முக்கியமாக வயது வந்த பெண்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் சிறந்த உணவு உளுந்து களி. பெண்களுக்கு பிரசவ நேரத்தில் ஏற்படும் இடுப்பு வலியை குறைப்பதற்கு உளுந்து களியை உண்ணலாம். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி, முதுகு வலி, கால் வலி போன்ற வலிகளை நீக்குவதற்கு உளுந்து களி சிறந்த மருந்தாக இருந்து வருகிறது. வயது முதிர்ந்தோர் மூட்டு தேய்மானத்தால் மிகவும் கஷ்டப்பட்டு வருவார்கள். அப்படி இருப்பவர்களுக்கு உளுந்து களியை அடிக்கடி உணவு பட்டியலில் சேர்த்து வந்தால் இந்த பிரச்சனைகள் குறையும். இவ்வாறு பல்வேறு நன்மைகளை உடைய உளுந்துக்களியை சில நிமிடங்களில் எப்படி செய்யலாம்
தேவையான பொருட்கள் :
உளுந்து – 1/4 கிலோ
பச்சரிசி – 1/2 டம்ளர்
வெந்தயம் – சிறிதளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கருப்பட்டி – 100 கிராம்
செய்முறை :
* முதலில் உளுந்து, பச்சரிசி மற்றும் வெந்தயத்தை ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
* ஊறிய பின் மிக்ஸி ஜாரில் மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் அரைத்து வைத்த மாவு கலவையை ஊற்றி தண்ணீர் வற்றும் அளவிற்கு கிளறி விட வேண்டும்.
* ஒரு அளவிற்கு மாவு கெட்டியான பதத்திற்கு வரும்போது நல்லெண்ணையை ஊற்றி கிளறிவிட வேண்டும்.
* நல்லெண்ணெய் மாவுடன் சேர்ந்து நன்றாக கெட்டியாக வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
* இதனை தட்டில் பரிமாறி நல்லெண்ணெய் மற்றும் கருப்பட்டியை பொடியாக செய்து வைத்துக்கொண்டு உளுந்தங்களியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
* ஒரு சிலர் கருப்பட்டியை பாகுபோல் காய்ச்சி உளுந்தங்களி செய்வார்கள். அதிக இனிப்பு பிடிக்காதவர்கள் மேலே குறிப்பிட்ட முறையில் உளுந்தங்களி செய்து சாப்பிடுவது உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது.